திருச்சி - கொச்சி இடையே புதிய விமான சேவை

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என 10 உள் நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா, கொழும்பு என 13 வெளி நாட்டு விமான சேவைகளும் உள்ளன.

மேலும், பயணிகளை கையாளும் திறனை அதிகரிக்க இங்கு ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகளின் ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி இறுதி வாரத்தில் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வெளி நாட்டு விமான சேவையும், இந்தியாவின் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உள் நாட்டு சேவையும் தொடங்கப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அலையன்ஸ் ஏர் நிறுவனம் கொச்சியை மையமாக வைத்து, விரைவில் கொச்சி - திருச்சி - சென்னை - திருச்சி - கொச்சி இடையே விமான சேவை அளிக்க உள்ளதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி - திருச்சிக்கு இடையிலான விமான சேவை என்பது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்ததும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1,500 உள் நாட்டு பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர்.

கொச்சிக்கும் இங்கிருந்து விமான சேவை தொடங்கினால், உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2 ஆயிரமாக அதிகரிக்கும். மேலும், நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து உள்நாட்டு சேவைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE