செயல்படாத இண்டிகோ இணையதளம்: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி 

By செய்திப்பிரிவு

மும்பை: இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளம் முடங்கியதால் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதே போல ‘டிஜியாத்ரா’ டிக்கெட் புக்கிங் தளமும் செயல்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜனவரி 16ஆம் தேதி இரவு இரவு 11 மணி முதல் ஜனவரி 17ஆம் தேதி காலை 8.30 வரை இண்டிகோ இணையதளம் மற்றும் செயலி ஆகியவை செயல்படாது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை இணையதளம் செயல்படாமல் இருப்பதால் டிக்கெட் புக் செய்யமுடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் இது எந்தவிதத்தில் விமானப் பயணத்தை பாதிக்காது என்பதை உறுதி செய்வதாகவும், பயணிகள் தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட போர்டிங் பாஸை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுமாறு இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளமான டிஜியாத்ராவும் செயல்படவில்லை.

அண்மையில் இண்டிகோ நிறுவனத்தின் விமானி மீது பயணி ஒருவர் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், தற்போது இந்த இணையதள முடக்கம் பேசுபொருளாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE