ஆதனக்கோட்டை பகுதியில் முந்திரி பருப்பு ஒரு டன் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பொங்கல் பண்டிகையையொட்டி 1 டன் முந்திரி பருப்பு விற்பனையானது.

புதுக்கோட்டை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வக்கோட்டை அருகே ஆதனக்கோட்டையில் சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளில் முந்திரிப் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு முந்திரிக் கொட்டைகளை அடுப்பில் பாத்திரத்தில் கொட்டி வறுக்கப்படுவதால் முந்திரிக் கொட்டையில் இருந்து எண்ணெய் நீக்கப்படுகிறது.

பின்னர் பதம் பார்த்து முந்திரிக் கொட்டைகளை உடைத்து பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு இயல்பான நாட்களை விட பொங்கல் பண்டிகை நேரத்தில் அதிகமாகவே முந்திரிப் பருப்பு விற்பனையாகும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் ஒரு டன் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆதனக்கோட்டையைச் சேர்ந்த ஜெயலட்சுமி கூறியது: கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் முந்திரி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு கிடைக்கும் முந்திரிக் கொட்டையுடன், பிற இடங்களில் இருந்தும் வாங்கி உடைத்து பருப்பாக்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக திகழ்கிறது.

கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் முந்திரிப் பருப்பு இடம் பெறாததால் கடைகளில் மக்கள் வாங்கினர். இதனால், எதிர் பார்த்ததை விட 1 டன்னுக்கும் மேல் விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE