தமிழகத்தில் 4-ஜி சேவையை ஏப்ரலில் தொடங்க திட்டம்: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 4ஜி சேவை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளர் டி.தமிழ்மணி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வீீடுகளுக்கு ஃபைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் உள்ளது.

இதன் மூலம், அதிவிரைவு, அளவில்லா டேட்டா மற்றும் பேசும் வசதியை வணிகம், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுடன், மதிப்புக் கூட்டப்பட்ட ஓடிடி சேவைகளுடன் வழங்குகிறோம். தற்போது 4.45 லட்சம் ஃபைபர் இணைப்புகள் உள்ளன. மாதம்தோறும் 16 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாதம்தோறும் அதிக அளவு ஃபைபர் இணைப்புகள் வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

‘பிஎஸ்என்எல் மிஷன் மோடு ஃபைபரைசேஷன்’ என்ற திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 1.6 லட்சம் தரைவழி தொலைபேசி இணைப்புகள் செப்புக் கம்பிகளுக்குப் பதிலாக, கண்ணாடி இழை கேபிளாக மாற்றப்பட உள்ளன. 6 மாதத்துக்குள் இந்தப் பணி நிறைவடையும்.

தமிழக அரசின் ‘சமகர சிக் ஷா-உயர்தொழில்நுட்ப ஆய்வகம்’ என்ற திட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த மாதம் 2 ஆயிரம் ஃபைபர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக 18004444 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘பாரத்நெட் உதயமி’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துக்களில், இதுவரை 7,276 கிராமப் பஞ்சாயத்துக்கள் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 4ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.440 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும். 185 வருவாய் கிராமங்கள் மற்றும் காடுகள், மலைகள் சார்ந்த 8 கிராமங்களில் 4ஜி சேவை வழங்குவதற்காக 6,372 கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

தற்போது 2ஜி, 3ஜி சேவைக்கான சிம்கார்டுகளைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இலவசமாக 4ஜி சிம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட பொது மேலாளர்கள் ஜெயக்குமார் ஜெயவேலு, சுதாகர ராவ் பில்லா, முதுநிலைப் பொதுமேலாளர் (நிதி) கே.கீதாஞ்சலி, முதன்மைப் பொதுமேலாளர்கள் எம்.முரளி கிருஷ்ணா, சசிகாந்த், பாரத் நெட் முதன்மைப் பொது மேலாளர் எம்.சந்திரசேகர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE