மத்திய, மாநில அரசுகள் மோதலால் மதுரையில் முடங்கிய சர்வதேச விமான நிலைய திட்டம்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களுக்கும் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. ஆனால், இந்த விமானநிலையத்தை இதுவரை சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படவில்லை. இதனால், காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த விமான நிலையம் செயல்படுகிறது. குறிப்பிட்ட உள்நாட்டு நகரங்கள், மூன்று வெளிநாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டும் ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகள், மதுரை விமானநிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

24 மணி நேர விமானசேவை தொடங்கப்பட்டு முக்கிய வெளிநாடுகள், உள்நாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டால் சென்னைக்கு அடுத்து மதுரை விமானநிலையமும், அதைச் சார்ந்த தென் மாவட்டங்களும் பெரும் வளர்ச்சிபெறும். தற்போது கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் நாட்டின் பிற நகரங்களுக்கு செல்வதற்கும், வெளிநாடு செல்வதற்கும் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குச் செல்கின்றனர். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கு இரண்டரை மணி நேரமும், அதன் பிறகு அந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசலைத் தாண்டி விமான நிலையத்தைச் சென்றடைய கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

ஆனால், கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள், மதுரை விமானநிலையம் வருவதற்கு வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகிறது. அதனால், இரவு நேர விமானசேவை தொடங்கினால் கன்னியாகுமரி முதல் மதுரையைத் தாண்டி உள்ள 14 மாவட்ட மக்களும் மதுரை விமானநிலையத்தைப் பயன்படுத்துவர்.

சமீபத்தில் திருச்சி விமான நிலைய விழாவில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையை சர்வதேச விமானநிலையமாக அறிவிக்க வலியுறுத்தினார். ஆனால், அதற்கு பிரதமர் மோடி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

மத்திய, மாநில அரசுகள் இடையே இணக்கமான உறவு இல்லாததால் ‘எய்ம்ஸ்’ முதல் மதுரை விமானநிலைய விரிவாக்கத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போய் உள்ளன. 24 மணி நேர விமானசேவையும், சர்வதேச விமானநிலையமாகவும் மதுரையை மாற்றுவதற்கு அனைத்து சாதகமான அம்சங்கள் இருந்தும் மத்திய, மாநில அரசுகளுடைய அரசியல் மோதல் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக மதுரையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை விமான நிலையத்தின் முகப்பு தோற்றம்

இதுகுறித்து மதுரை தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: இரவு நேர விமானங்கள் இயக்கப்பட்டால் மட்டுமே மதுரையை நாட்டின் முக்கிய நகரங்களுடனும், முக்கிய வெளிநாடுகளுடனும் இணைக்க முடியும். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வேலை, தொழில் நிமித்தமாக அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால், இந்த நாடுகளுக்குச் செல்ல மதுரையில் இருந்து விமானசேவை இல்லை.

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை தொடங்கப்படும் என கடந்த ஆண்டு ஜனவரி 12 -ம் தேதி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அறிவித்து இன்றோடு ஓராண்டாகியும் தற்போது வரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கே வரவில்லை. அதேநேரம் மதுரையுடன் இதுபோல் 24 மணி நேர விமானச் சேவை தொடங்கப்படுவதாக அறிவித்த பிற விமான நிலையங்களில் இந்தத் திட்டம் அறிவித்தபடி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை மதுரை விமான நிலையத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சிஆர்பிஎப் வீரர்கள் பற்றாக் குறையால் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. இந்த வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்தாலே அவர்கள் கூடுதல் வீரர்களை நியமித்துவிடுவார்கள். ஆனால், அதற்கான அழுத்தத்தை தமிழக அரசு செய்துள்ளதா? என்றால் இல்லை என்றே கூறப்படுகிறது.

மதுரையில் இருந்து மலேசியா, குவைத் உட்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்க விமான நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. ஆனால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, விமான நிறுவனங்கள் முன் வந்தால் மட்டுமே 24 மணி நேர விமானசேவையை தொடங்க முடியும் என கைவிரிக்கின்றனர்.

அதே நேரத்தில் விமான நிறுவனங்களோ 24 மணி நேர சேவையை அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் அமல்படுத்தினால் மட்டுமே நாங்கள் இரவில் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு ஒதுக்க விண்ணப்பிக்க முடியும் என்கின்றனர். இதற்கு தற்போது வரை தீர்வு காணப்படவில்லை.

ஒரு விமானநிலையத்துக்கு உள் கட்டமைப்பு வந்தால்தான் முன்னேற்றம் வரும். மதுரை விமானநிலைய ஓடுபாதை 7,500 அடி உள்ளது. அதை 12,500 அடியாக உயர்த்தும் விமானநிலைய விரிவாக்கப் பணிக்கு தமிழக அரசு 615.92 ஏக்கர் ஒதுக்க வேண்டும். ஆனால், தற்போது வரை தமிழக அரசு எஞ்சியுள்ள 20 ஏக்கர் நிலத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை.

இந்த இடம்தான், ஓடுதள விரிவாக்கத்துக்கு முதலில் உள்ள இடம். இந்த இடத்தை தமிழக அரசு ஒப்படைத்தால் மட்டுமே ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய முடியும். இந்த நிலம் நீர்நிலை என்பதால் அதேபோன்று மற்றொரு நீர்நிலையை உருவாக்கினால் மட்டுமே தமிழக அரசு இந்த நிலத்தை எடுத்து ஒப்படைக்க முடியும்.

ஜெகதீசன்

இந்த முடிவை தமிழக முதல்வர் தலைமையிலான குழு முடிவெடுக்க வேண்டும். ஆனால், இந்தக் குழு தற்போது வரை கூடவே இல்லை. நிலமும் ஒப்படைக்கப்படவில்லை. மேலும், நிலத்தை பெருமளவு கையகப் படுத்தாமலே `அன்டர் பாஸ்' முறையில் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்யலாம். ஆனால், `அன்டர் பாஸ்' செல்லும் ரிங்ரோடு (ஒத்தக்கடை-கப்பலூர்) தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

தமிழக அரசு ஒப்படைக்காததால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரையில் ‘அன்டர் பாஸ் ரன்வே’ திட்டத்தை மேற்கொள்ள முன்வரவில்லை. அதேநேரத்தில் திருச்சி, சண்டிகர், டெல்லி, மும்பை, வாராணசி போன்ற நிலம் கையகப்படுத்த சிக்கல் உள்ள பல விமான நிலையங்களில் `அன்டர் பாஸ்' ஓடுபாதை திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

13 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்