எம்எஸ்எம்இ வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பு: 174 நிறுவனங்களிடம் ரூ.42 கோடி கொள்முதல்

By செய்திப்பிரிவு

சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் பன்னாட்டு வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முன்னிலையில், விற்போர் - வாங்குவோர் இடையே ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் குறுந்தொழில் நிறுவனங்களின் மூலதன செலவைக் குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், கிண்டி, அம்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில், ரூ.175.18 கோடி மதிப்பில் 264 தொழிற்கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் முதல்வரால் திறக்கப்பட உள்ளன.

எம்எஸ்எம்இ நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதிகள் சென்னை - அம்பத்தூர், கோயம்புத்தூர் -குறிச்சி தொழிற்பேட்டைகளில் ரூ.51.47 கோடிமதிப்பில், 1,300-க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் தங்கும் வகையில் புதிய விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளன.

இந்தியாவிலேயே முதன்முறையாக எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சொத்து பிணையில்லா கடன் பெற தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், இதுவரை, 30,158 தொழில் முனைவோருக்கு ரூ.4,400 கோடி வங்கிக்கடனுக்கு ரூ.410.78 கோடி உத்தரவாதத்தை அரசு அளித்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வேளாண் பெரு வழித்தடம் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த, ரூ.1,170 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் நடத்தப்படும் இந்த வாங்குபவர் - விற்பனையாளர் சந்திப்பில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் இதர உலக நாடுகளில் உள்ள 39 கொள்முதலாளர்கள், தமிழகத்தில் இருந்து 270 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில், ​174 நிறுவனங்களிடம் இருந்து ரூ.42.11 கோடிக்கு கொள்முதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், 16.61 கோடி மதிப்பிலானவை 73 புதியமுதல்முறை ஏற்றுமதியாளர் களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE