வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. போதிய வெயில் இல்லாததால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பானை உற்பத்தியைச் செய்ய முடியவில்லை என்றும், களிமண் தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உற்பத்தி, வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
தைப்பொங்கல் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது கரும்பு, புதுப்பானையில் பொங்கப்படும் பச்சரிசி பொங்கலும் தான். பொங்கல் பண்டிகையுடன் பொங்கல் பானையைப் பிரிக்க முடியாத நிலை தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது. இன்றைய நவீனக் காலத்தில் இயற்கையை நோக்கித் திரும்பி வரும் மக்கள் பழமையை அதிகமாகத் தேடிச் செல் கின்றனர். அந்த வகையில் இத்தனை ஆண்டு காலம் பித்தளைப் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைத்து பண்டிகையைக் கொண்டாடிய மக்கள் சமீப காலமாக மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மண் பானையை மக்கள் விரும்பினாலும் எதிர்பார்த்த அளவுக்குக் களிமண் கிடைக்காததால் மண்பாண்டத் தொழில் அதலப்பாதாளத்துக்குச் சென்றுவிட்டதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருவோர் குற்றஞ்சாட்டும் அதேநேரத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ வேலூர் மாவட்டத்தில் கொசப்பேட்டை, சலவன்பேட்டை, கே.வி.குப்பம், லத்தேரி, பள்ளிகொண்டா, குடியாத்தம் போன்ற பகுதிகளில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடு வோர் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.
» வாகன காப்பகம் இல்லை... ஆனால் ‘பார்க்கிங்’ கட்டணம் வசூல் @ மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஆலங்காயம், வாணி யம்பாடி போன்ற பகுதிகளிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, கலவை, வாலாஜா, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் மண்பாண்டத் தயாரிப் பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டு முழுவதும் எங்கள் தொழிலை நாங்கள் செய்ய முடிவதில்லை. பொங்கல் திருநாள், தீபாவளி, கார்த்திகை, நவராத்திரி போன்ற திருவிழா நாட்களில் தான் எங்கள் தொழில் சூடுபிடிக்கும். பண்டிகை நாட்களில் மண்பாண்டங்களில் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் மண்பாண்டப் பொருட்களைத் தயாரிக்க முடியவில்லை.
அதற்குக் காரணம் மழைப் பொழிவு, வெயில் அளவு குறைவு, களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு, ஏரிகளில் மண் எடுக்க வருவாய் மற்றும் காவல் துறையினரின் கெடுபிடிகள் எனபல காரணங்களால் எங்கள் தொழில் சமீப காலமாகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
ஒரு மண்பாண்டத் தொழிலாளி 8 மணி நேரம் உற்பத்தி செய்தால் அவருக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை கிடைக்கிறது. ஆனால், அவர் தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்யப் போதிய அளவு களிமண் கிடைக்காததால் அவர் எதிர்பார்த்த கூலியை அவரால் சம்பாதிக்க முடிவதில்லை. இதனால், பலர் மாற்றுத்தொழில் தேடிச்சென்றனர். பல இடங்களில் மண்பாண்டத் தொழிலுக்கு மூடுவிழா நடந்துள்ளது. ஒரு யூனிட் களிமண் ரூ.8 ஆயிரம் கொடுத்து வாங்கி வருகிறோம்.
அப்படியே வாங்கி வந்தாலும் வெயில் இல்லாததால் பானை உற்பத்தி செய்வதில் இடையூறு ஏற்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்து நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் வெயில் அளவு குறைந்ததாலும், வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிர்பார்த்த உற்பத்தி இல்லாததால் இந்தப் பொங்கல் எங்களுக்குச் சிறப்பான பொங்கலாக இருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ரூ.50-ல் தொடங்கி ரூ.300 வரை பானைகளை விற்பனை செய்கிறோம். இந்த விலை எங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை. களிமண் விலை உயர்வு, விறகு விலை உயர்வு, போக்குவரத்து செலவு, கூலியாட்கள் சம்பளம் எனக் கணக்கிட்டால் எங்களுக்குக் கிடைப்பது சொற்ப வருமானம் என்பதால் தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரம் மேம்பட உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்த விலையில் மணல் மற்றும் களிமண் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன், மண்பானையும், மண்ணால் செய்யப்பட்ட அடுப்பை அரசே கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். எங்கள் குழந்தைகள் உயர்கல்வி பெறக் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். நலவாரியம் அமைத்து எங்களுக்கான மருத்துவக்காப்பீடு, கல்வி உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, வயதான மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் போன்ற சலுகைகளைத் தமிழக அரசு செய்து தர வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago