ஒரே நாளில் 7,500 ஓட்டல் முன்பதிவு, 2300 விமான டிக்கெட் ரத்து @ மாலத்தீவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள், இந்தியாவை அவதூறாக விமர்சித்த மாலத்தீவை புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதை ஏற்று நேற்று ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சல்மான் கான், “பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவின் அழகான, தூய்மையான, அற்புதமான கடற்கரையில் இருப்பதை பார்த்து மகிழ்கிறேன். இந்தியர்கள் லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

நடிகர் அக்சய் குமார், “மாலத்தீவின் அரசியல் தலைவர்கள் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்தே மாலத்தீவுக்கு அதிக சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதுபோன்ற வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது. நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றுள்ளேன். ஆனால் மரியாதை, கவுரவம் மிகவும் முக்கியம். மாலத்தீவுக்கு பதிலாக இந்தியாவில் உள்ள தீவு சுற்றுலா தலங்களுக்கு செல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜான் ஆபிரகாம், “இந்தியர்களின் விரும்தோம்பலுக்கு ஈடு இணை கிடையாது. இந்திய சுற்றுலா பயணிகள் லட்சத்தீவுக்கு செல்ல வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஷரத்தா கபூர், “லட்சத்தீவுகளின் கடற்கரைகள் அழகானவை, அற்புதமானவே. இந்த ஆண்டு லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சச்சின் அழைப்பு: கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், “எனது 50-வது பிறந்தநாளை மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் கடற்கரையில் கொண்டாடினேன். அந்த தீவு கடற்கரை மிகவும் அழகானது. இந்திய தீவுகளுக்கு சுற்றுலா செல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார். இதேபோல பல்வேறு பிரபலங்கள் இந்திய சுற்றுலா தலங்களுக்கு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE