சென்னை: தமிழக அரசு அளிக்கும் வரியைவிட மத்திய அரசு வழங்கும் நிதி அதிகம் என்று, சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புள்ளி விவரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ எனும் முன்முயற்சி பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடமாடும் முகாம் வாகனத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டங்களின்கீழ் தேர்வான பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கினார். அவர்களது கருத்துகள், ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் பேசியதாவது: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 17 முக்கிய நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கிராமங்களில் 6.80 லட்சம், சென்னையில் 1.50 லட்சம் வீடுகள் உட்பட தமிழகத்தில் 14 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பின்றி சென்னையில் 25.70 லட்சம் பேர் உட்பட தமிழகத்தில் 3.64 கோடி பேர் பயனடைகின்றனர்.
சிறு தொழில் செய்ய முத்ரா திட்டத்தின்கீழ் 5.20 கோடி பேருக்கு ரூ.2.67 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 20.60 லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர். ஸ்வநிதி குறு கடனுதவி திட்டத்தில் பயன்பெற்றவர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள். ஓபிசி பிரிவினருக்கு 32 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
» “கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன்” - இளையராஜா
» “எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம்...” - நடிகர் தனுஷ் ஆதங்கம்
‘தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே செய்வது இல்லை’ என்கின்றனர். ‘நாங்கள் கொடுக்கும் வரியைதானே கேட்கிறோம், அதிகாரத்தோடு, உரிமையோடு கேட்கிறோம்’ என்று சொல்பவர்களுக்கு சில விஷயங்களை கூற விரும்புகிறேன்.
வரியில் இருந்து கிடைக்கும் தொகையைதான் மத்திய அரசு பங்கிட்டு வழங்குகிறது. வந்தே பாரத் ரயில் தயாரிப்பை சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனத்துக்குதான் மத்திய அரசு வழங்கியுள்ளது. அது தமிழகத்துக்கு கொடுத்ததாக கணக்கில்லையா? ரூ.1,260 கோடியில் சென்னையின் புதிய விமான முனையம், 170 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில், ரூ.50 ஆயிரம் கோடியில் சென்னை - பெங்களூரு விரைவு சாலை, ரூ.3 ஆயிரம் கோடியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்களை மத்திய அரசுதான் செயல்படுத்தி வருகிறது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மானியமாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆணைய பரிந்துரை இல்லாமல் மாநில வளர்ச்சிக்காக சிறப்பு திட்டத்தின்கீழ் 50 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப செலுத்தும் வகையில் ரூ.6,412 கோடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்துக்கு இதுவரை ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து நேரடி வரியாக ரூ.6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி மட்டுமே கிடைக்கப் பெற்றது.
இதுதவிர, 1996-97 காலகட்டத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த வகையில் தமிழகத்துக்கான ரூ.3,225 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு தராமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.
செஸ் வரி வகையில் வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து நெடுஞ்சாலை அமைக்க ரூ.37,965 கோடி, பள்ளிகளுக்கு ரூ.11,116 கோடி, வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4,739 கோடி, கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.3,637 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில ஜிஎஸ்டி வரி வருவாயில் 100 சதவீதமும் மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. மத்திய ஜிஎஸ்டி ரூ.27,360.95 கோடியில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்தியில் வசூலிக்கப்படும் தொகை மொத்தமாக மாநிலத்துக்கே திருப்பி வழங்கப்படுகிறது. விரோத மனப்பான்மையுடன் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் நாங்கள் வைத்துக் கொள்ளவில்லை. சொன்ன தேதியில் வழங்கப்படுவதோடு, சில நேரங்களில் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாண் இயக்குநர் அஜய்குமார் வத்ஸவா, இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் சாந்தி லால் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் அசோகன், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன், சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago