சென்னையில் ஜன 7,8-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.5.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாக தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் வரும் 7,8 தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கடந்த இரண்டாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் அதன்பின் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில்,கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மாநாடுகளின்போது பெறப்பட்ட முதலீடுகளை மிஞ்சும் வகையில் முதலீடுகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ.5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, குறு, சிறு தொழில்துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை தற்போது தமிழக தொழில் துறை செய்து வருகிறது.

சிஐஐ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக, நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் புதிய கட்டிடம் தயாராகி வருகிறது. இதில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தொழில்துறையும் அதன்கீழ் இயங்கும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகமுதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நிலை -1 நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வரிடம் தொழில்துறை செயலர் அருண்ராய் விளக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE