இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை மத்தள விமான நிலையத்தை வாங்க ரஷ்யா ஆர்வம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் சேர்ந்து வாங்குவதற்கு ரஷ்யா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவரது சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டம் மத்தளவில் கடந்த 2009-ம் ஆண்டு சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த விமான நிலையத்துக்கு மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டு கடந்த 19.03.2013 அன்று மகிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.

ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் 3500 மீட்டர் நீளம் 75 மீட்டர் அகலத்தில் ஓடு பாதை உள்ளது. மேலும் 115 அடி உயரக் கட்டுப்பாட்டு கோபுரமும் உண்டு. இந்த விமான நிலையத்திலிருந்து சேவைகள் வழங்க தனியார் விமான நிறுவனங்கள் தொடக்கத்திலிருந்தே பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனால் இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது.

பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்வு செய்யப்பட்ட பின்னர் 09.02.2015 அன்று முதல் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளதால் அதன் அருகில் உள்ள மத்தள விமான நிலையத்தை இந்திய அரசு குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியில் 2016-ம் ஆண்டிலிருந்தே ஈடுபட்டு வந்தது.

2018-ம் ஆண்டு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு ஒப்புக்கொண்ட போது அந்நாட்டு எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் அது தடைபட்டுப் போனது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, இந்தியாவிடம் தயவு செய்து மத்தள விமான நிலையத்தை எடுக்க வேண்டாம் என்று கூறினேன். எனது கிராமத்தில் அமைந்துள்ளதோடு இது எங்களின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகும். இந்தியா எனது கோரிக்கைக்கு செவிசாய்த்ததால் எங்களால் மத்தள விமான நிலையத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுடன் கூட்டாகச் சேர்ந்து ரஷ்யா மத்தள விமான நிலையத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தெற்காசியாவில் ரஷ்யர்கள் அதிகளவில் இந்தியாவுக்குச் சுற்றுலா வருகின்றனர். அதற்கடுத்தபடியாக இலங்கைக்குச் செல்கின்றனர். இலங்கை செல்லும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் 12 லட்சம் ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் விமானத் துறை அமைச்சர் ருவன் சந்திராவுடன் இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியனின் சமீபத்திய கலந்துரை யாடலின் போது மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான தனியார் கூட்டு முயற்சியுடன் நிர்வகிப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது, என இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்