எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உடன் கூட்டா? - செபிக்கு விளக்கம் தந்த வோடபோன் ஐடியா

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உடன் வர்த்தக ரீதியாக இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது குறித்த விளக்கத்தை செபி வசம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ல் ஐடியா நிறுவனத்துடன் வோடபோன் இந்தியா இணைந்தது. தற்போது இந்திய டெலிகாம் சந்தையில் ‘வோடபோன் ஐடியா’ நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்த சூழலில் மஸ்கின் ஸ்டார்லிங்க் உடன் வோடபோன் ஐடியா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டது. அதையடுத்து செபி இது குறித்த விளக்கம் கேட்டது.

“கடந்த 1-ம் தேதி ஸ்டார்லிங்க் உடன் எங்கள் நிறுவனம் வர்த்தக ரீதியாக கூட்டு சேர உள்ளதாக வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து செபி விளக்கம் கேட்டது. செபியின் விதிமுறைகளுக்கு இணங்க அனைத்து முக்கியத் தகவல்களையும் முறைப்படி நிறுவனம் தெரிவிக்கும் என்பதை இந்நேரத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அந்நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை அன்று வீழ்ச்சியடைந்தது. முன்னதாக, முதலீட்டார்கள் இந்நிறுவன பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டிய நிலையில் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.

ஸ்டார்லிங்க்: அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 70 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-எக்ஸ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இதில் இந்தியாவும் அடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE