சென்னையில் ஜன. 7, 8-ல் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஜனவரி 7, 8 -ம் தேதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, குறு, சிறுதொழில்துறை சார்பில் மாவட்டங்கள் தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘‘2024-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதுகுறித்த ஆர்வம் மென்மேலும் பெருகி வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல் திட்டத்தை உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடத் தமிழகம் மும்முரமாகிறது.

தமிழகத்தின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும் பிரம்மாண்டமான மாநாட்டில் வரும் ஜன 7, 8 தேதிகளில் இணைந்திடுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE