பருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு - ஜவுளித் தொழிலில் புதிய கவலை

By இல.ராஜகோபால்

கோவை: நடப்பாண்டுக்கான பருத்தி ‘பீக் சீசன்’ தொடங்கியுள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. இருப்பினும் வர்த்தகர்களே அதிகளவு பஞ்சை வாங்கி வருவதால் எதிர்வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் தொழில் முனைவோருக்கு மட்டும் விற்பனை செய்ய இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவுளித் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் பருத்தி சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் வரை இருப்பது வழக்கம். கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான பருத்தி சீசனில் மொத்தம் 336.60 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டு 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 316.57 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

பருத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பருத்தியின் விலை தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில், தொழில்முனைவோரை விட வர்த்தகர்களே அதிகம் பருத்தியை வாங்கி வருவதாகவும், ஜவுளித் தொழில் துறையினருக்கு மட்டும் இந்திய பருத்திக் கழகம் பருத்தியை விற்பனை செய்வதை உறுதிப் படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்க ( சைமா ) தலைவர் சுந்தர ராமன், இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் ( சிட்டி ) தலைவர் ராஜ்குமார், ‘சிஸ்பா’ தொழில் அமைப்பின் கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

பருத்தியை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித் தொழில், விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக திகழ்கிறது. உலக பொருளாதார மந்த நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஓராண்டாக இந்திய ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது.

உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப் பட்டுள்ளன. இந்தாண்டுக்கான பருத்தி சீசன் அக்டோபரில் தொடங்கிய நிலையில், தற்போது ‘பீக்’ சீசனாகும். இந்திய பஞ்சு ஒரு கேண்டி ( 355 கிலோ ) பஞ்சு விலை தற்போது ரூ.55,100 ஆக உள்ளது. சர்வதேச பஞ்சின் விலை ஒரு கேண்டி 52,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக சர்வதேச பஞ்சு விலைக்கும், இந்திய பஞ்சு விலைக்கும் 12 முதல் 14 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கும். தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. பஞ்சு விலை குறைந்துள்ள போதும் நிதி நெருக்கடி காரணமாக ஜவுளித் தொழில்முனைவோர் அதிகளவு பஞ்சு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்பாலைகள் என்ற பெயரில் வர்த்தகர்கள் அதிகளவு பஞ்சு கொள் முதல் செய்து வருகின்றனர்.

மார்ச் மாதத்துக்குப் பின் தொழில் முனைவோர் பஞ்சு வாங்க தொடங்கும் போது, பருத்தியை அதிகம் இருப்பு வைத்து வர்த்தகர்கள் விலையை தாறு மாறாக உயர்த்த வாய்ப் புள்ளது. எனவே இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) நூற்பாலைகளுக்கு மட்டும் பருத்தியை விற்பனை செய்ய வேண்டும். நூற்பாலைகள் என்ற பெயரில் அதிகளவு பருத்தியை வாங்குவோரை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்.

தற்போது டெண்டர் முறையில் தினமும் பருத்தி விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, மாதம் ஒரு முறை என்ற அடிப்படையில் இந்திய பருத்திக் கழகம் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்திய ஜவுளித் தொழில்துறையினருக்கு மிகுந்த பயனளிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE