இ
த்தனை நட்பு பலம் இருந்தபோதும், பிசினஸில் ஏகப்பட்ட பிரச்சினைகள். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் வரவில்லை. அலுவலக வாடகை 300 டாலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் சம்பளமும், இதர செலவுகளும் இன்னொரு 300 டாலர்கள். முதல் மாத வருமானம் வெறும் 20 டாலர்கள். இந்த வரவு எட்டணா, செலவு பத்தணா கதை தொடர்ந்தால் தலையில் துண்டுதான்.
ஊழியர்கள் “இந்த உப்புமாக் கம்பெனி தேறாது” என்று முடிவு கட்டிவிட்டார்கள். ஆனாலும் கம்பெனியில் தொடர்ந்தார்கள். ஏனென்றால், அத்தனை பேரும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள். இதை விட்டால் வேறு வேலை கிடைக்காது. ஒவ்வொரு மாதமும், கடனோ உடனோ வாங்கி, முதல் தேதியில் சம்பளம் தரும் நேர்மையான முதலாளி. அப்போது பணிபுரிந்த ஜாங் ஹாங் (Zhang Hong) என்னும் பெண்மணி சொன்னார். ``பிசினஸ் ஜெயிக்கும் என்னும் நம்பிக்கையோடு இருந்தவர் ஜாக் மா ஒருவர்தான். சக ஊழியர்களை ஊக்கமூட்டும் மகத்தான சக்தி அவரிடம் இருந்தது.”
உச்சிமீது வானிடிந்து விழுந்தாலும், ஜாக் மா தோல்வியை ஏற்பதில்லை, துவள்வதில்லை. எப்படியாவது, ஆமாம், எப்படியாவது. வருமானத்தை அதிகமாக்கவேண்டும். மூளை நியூரான்களுக்கு ஓவர்டைம் வேலை கொடுத்தார். பிறந்தது ஐடியா.
ஹாங்ஸெள நகருக்கு அருகில் யிவூ (Yiwu) என்னும் ஊர் சீனாவின் மொத்த வியாபாரிகளின் மையங்களுள் ஒன்று. ஜாக் மா இங்கே மோட்டார் சைக்கிளில் போவார். பரிசுப் பொருட்கள். செயற்கைப் பூக்கள், பிளாஸ்டிக் தரைவிரிப்புகள், புத்தகங்கள் ஆகியவற்றைச் சாக்குப் பைகளில் நிரப்பிவருவார். மொழிபெயர்ப்புக் கம்பெனியின் முன் பக்கம், இந்தச் சாமான்கள் விற்பனை செய்யும் கடையானது. இத்தோடு நிறுத்தவில்லை. முக்கிய வீதியில் ரோட்டோரக் கடை போட்டார். பல நாட்களில் மனைவியும் உடன் நிற்பார். பொருட்களை அவரே கூவிக் கூவி விற்பார். எப்படித் தெரியுமா? முழுநேர ரோட்டு வியாபாரி கெட்டார், ``நீங்கள் தெற்கிலிருந்து வந்தாலும், வடக்கே போய்க்கொண்டிருந்தாலும், வாருங்கள். இந்தப் பொருட்களைப் பாருங்கள். நீங்கள் நிற்காவிட்டால், நான் திரும்பி வரமாட்டேன். என்னிடம் வாங்கவில்லையே என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.” குரலில் உற்சாகம், தன்னம்பிக்கை. தினமும் அமோக விற்பனை. ஒரு பட்டதாரி, முன்னாள் மாணவர் தலைவர், கல்லூரி ஆசிரியர், கம்பெனி முதலாளி தெருவில் வியாபாரம் செய்வதா என்னும் போலி கர்வம் இல்லை. செய்யும் தொழிலே தெய்வம். முயற்சியைக் கைவிடுவதுதான் மெத்தனம். இப்படி தட்டித் தடுமாறி மூன்று வருடங்கள். மொழிபெயர்ப்பு பிசினஸில் முதன் முதலாக லாபம் வந்தவுடன்தான், சில்லறை வியாபாரத்தை நிறுத்தினார்.
பிசினஸை பிரம்மாண்டமாக வளர்க்கவேண்டும், கோடிக் கோடியாகச் சம்பாதிக்கவேண்டும் என்பது ஜாக் மா ஆசை. எத்தனைதான் தலைகீழாக நின்றாலும், மொழிபெயர்ப்பு பிசினஸில் அது சாத்தியமேயில்லை என்று மூன்று வருட அனுபவம் சொன்னது. வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். பவுலோ கோய்லோ* (Paulo Coelho) என்னும் பிரேசில் நாட்டு எழுத்தாளர் தன் ரசவாதி (Alchemist) என்னும் உலகப் புகழ்பெற்ற புத்தகத்தில் சொல்லுவார், ``நீங்கள் எதையாவது மனமார விரும்பும்போது, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதை அடைய உங்களுக்கு உதவி செய்யும். (When you want something, all the universe conspires in helping you to achieve it.)
*(பிறந்த ஆண்டு 1947. 1988 – ஆம் ஆண்டில் இவர் எழுதிய Alchemist போர்த்துக்கீசிய மொழியில் எழுதி வெளியிடப்பட்டது. 1993 – இல் ஆங்கிலப் பதிப்பு வெளியானது. இதுவரை 70 மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஆறரைக் கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தமிழில் ரசவாதி என்னும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகச் சுருக்கம் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=h9UbJ9WYue0 )
எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இன்ஸ்டிடியூட்டின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையில் பில் அஹோ (Bill Aho) என்னும் அமெரிக்கப் பேராசிரியர் இருந்தார். இன்ஸ்டிடியூட்டில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. இதில் ஜாக் மா ஒருவர். அத்தோடு, பழகவும் இனியவர். ஆகவே, இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். ஒரு நாள் பில் இன்டர்நெட் என்னும் புதிய தொழில்நுட்பம் பற்றிச் சொன்னார். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் இதன் மூலம் உடனடியாகத் தொடர்பு கொள்ளமுடியும், இந்த நுட்பம் தகவல் யுகம் என்னும் பொற்காலத்தை மலரவைக்கப்போகிறது என்று விளக்கினார். வெளியுலகத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வாழ்ந்த தன்னைப் போன்ற சீனர்களுக்கு இது மாபெரும் கலாசாரப் புரட்சி, புது வாழ்க்கைமுறையின் தொடக்கம் என்று ஜாக் மா உணர்ந்தார். அவர் நாடி நரம்புகளில் உற்சாக ஊற்று.
வீட்டுக்கு வந்தார். நடையில் துள்ளல். சோபாவில் உட்கார்ந்தார். மனைவி காத்தி அவர் மார்பில் சாய்ந்துகொண்டாள். இன்டர்நெட் பற்றி விவரிக்கத் தொடங்கினார். பேசும்போது இதயத்தின் வேகத் துடிப்பு, உணர்ச்சிக் கொந்தளிப்போடு வந்த வார்த்தைகள்……காத்திக்குத் தெரிந்தது, ``தன் வருங்காலம் இன்டர்நெட்டோடுதான்” என்று கணவர் முடிவெடுத்துவிட்டார். சீனாவின் பெரும்பாலானோர் போல், காத்திக்கும் 1994 – இல் இன்டர்நெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், தன் கணவர் கண்ணை மூடிக்கொண்டு எதிலும் குதிப்பதில்லை, முன்வைத்த காலைப் பின்வைப்பதுமில்லை என்று தெரியும்.
ஜாக் மா இன்டர்நெட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். அதற்கு அமெரிக்கா போகவேண்டும். கொஞ்ச நஞ்சச் சேமிப்பும் பிசினஸில் கரைந்து கொண்டிருந்தது. டிக்கெட் வாங்கக்கூடக் காசில்லை. இந்தக் கும்மிருட்டில் ஒரு வெளிச்சம். பிரபஞ்சம் உதவிக்கு வந்தது.
டாங்லூ (Tonglu) என்னும் மாவட்டத்தின் அதிகாரிகள் ஜாக் மாவை அணுகினார்கள். டாங்லூவை ஹாங்ஸெள நகருடன் இணைக்கும் 88 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஒரு அமெரிக்க நிறுவனம் இதில் முதலீடு செய்ய சம்மதித்தது. சீன அரசின் அனுமதியோடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓடின மூன்று வருடங்கள். அமெரிக்காவிலிருந்து ஒரு டாலர்கூட வரவில்லை. அந்த நிறுவனத்துக்கு ஹாங்காங்கில் கிளை இருந்தது. டாங்லூ அதிகாரிகள் அந்தக் கதவைத் தட்டினார்கள். ``பண விஷயமா? அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமை அலுவலகம். அங்கேதான் கேட்கவேண்டும்” என்று தங்கள் கைகளைக் கழுவினார்கள். லாஸ் ஏஞ்சல்ஸுக்கு போன் செய்தால், எடுப்பாரில்லை. கடிதங்கள் அனுப்பினால், கிணற்றில் போட்ட கல். அமெரிக்கா போய் அந்தக் கம்பெனியைச் சந்தித்துச் சிக்கலைத் தீர்க்கவேண்டும். ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த நம்பிக்கையான சீனர் வேண்டும். டாங்லூ அதிகாரிகளின் தேர்வு ஜாக் மா.
ஜாக் மா முதலில் ஹாங்காங் போனார். வரவேற்பு அறையிலேயே குட்பை சொன்னார்கள். அமெரிக்கா போக டாங்லூ அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். தந்தார்கள். சகப் பேராசிரியர், நண்பர் பில் அஹோ அமெரிக்கரல்லவா? அவரிடம் தன் பயணம் பற்றிச் சொன்னார். வாழ்த்துகளைத் தெரிவித்த அவர் சொன்னார்,
``என் மருமகன் ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி (Stuart Trusty), மற்றும் உறவினர்கள் டேவ் ஸெலிக் (Dave Selig), டோலோரெஸ் ஸெலிக் (Dolores Selig) ஆகிய மூவரும் சியாட்டில் (Seattle) நகரத்தில் இருக்கிறார்கள். மருமகன் அடிக்கடி அலுவலக வேலையாகச் சுற்றுப்பயணம் செய்வார். ஊரில் இருக்கமாட்டார். ஆகவே, ஏதாவது உதவி தேவைப்பட்டால் நீங்கள் டேவ், டோலோரெஸ் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். நான் அவர்களுக்கு போன் செய்து சொல்லிவிடுகிறேன்.”
``நான் லாஸ் ஏஞ்சல்ஸ் போகிறேன். சியாட்டில் அங்கிருந்து பக்கமா?”
“இல்லை. 1100 மைல் தூரம். விமானப் பயணமே மூன்று மணி நேரம் எடுக்கும்.”
``டாங்லூ அரசு செலவில் நான் லாஸ் ஏஞ்சல்ஸ் போகிறேன் சொந்த வேலைக்காக சியாட்டில் போவது சரியல்ல. ஆகவே, அவர்களைப் பார்க்கமுடியாது. ஆனால், கட்டாயம் போன் செய்கிறேன்.”
ஜாக் மா லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். டாக்சி பிடித்து, தான் முன்பதிவு செய்திருந்த ஹோட்டல் போனார். அங்கே தங்கப்போவதாக அமெரிக்கக் கம்பெனி யிடம் சொல்லியிருந்தார். அங்கே வந்து அவரைச் சந்திப்பார்கள். ``ஆஸ்திரேலியாவில் கென் மார்லி விருந்தோம்பல். இப்போது அமெரிக்காவில் இந்தக் கம்பெனி ராஜோபசாரம் அளிக்கப் போகிறது. நான் எத்தனை அதிர்ஷ்டசாலி?” என்னும் பூரிப்பு.
ஆனால், அவருக்காகக் காத்திருந்த திக் திக் திகில் அனுபவங்கள்……….ராஜேஷ்குமார் நான்கு மர்ம நாவல்கள் எழுதலாம்; சூர்யா சிங்கம் 4, சிங்கம் 5, சிங்கம் 6 அவதாரங்கள் எடுக்கலாம்.
slvmoorthy@gmail.com
(குகை இன்னும் திறக்கும்)
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago