பங்குச் சந்தை முதலீட்டாளர் எண்ணிக்கை 8.4 கோடியாக உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளியது உ.பி.

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 22.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்திய பங்குச் சந்தை இடம்பிடித்துள்ளது.

இதனிடையே, பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை 22.4 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் 25-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8.49 கோடியாக உள்ளது. அதிக பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதல் இடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் 1.48 கோடி முதலீட்டாளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில், குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி தற்போது உத்தர பிரதேசம் 2-ம் இடம் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் 89.5 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். குஜராத்தில் அந்த எண்ணிக்கை 76.5 லட்சமாக உள்ளது.

அதிகபட்சமாக, பிஹாரில்பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36.6 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 33.8 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை முதலீட்டை எளிமையாக்கும் வகையில் பல்வேறு செயலிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டுக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

4 டிரில்லியன் டாலர்: இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்புஇவ்வாண்டில் முதன்முறையாக 4 டிரில்லியன் டாலரை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 16,828 ஆக இருந்தது. தற்போது அது 21,500 புள்ளிகளைக் கடந்துள்ளது. சென்செக்ஸ் 72,200 புள்ளிகளை தாண்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE