கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்க இந்தியா, ரஷ்யா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தின் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அணுமின் நிலையம் 2027 முதல் தனது முழு திறனுடன் செயல்படவுள்ளது. இந்நிலையில் இந்தியா-ரஷ்யா இடையே நடைபெறும் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க 5 நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்ய தலைவர்களுடன் பேசி வருகிறார். ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் எதிர்காலத்துக்கு தேவையான அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். பொருளாதாரத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடர்பாக துணை பிரதமர் டெனிஸ் மான்ட் ரோவுடன் விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இரு நாடுகள் இடையே வர்த்தகம், நிதி, போக்குவரத்து, எரிசக்தி, விமான போக்குவரத்து மற்றும் அணுசக்தி துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய வாய்ப்புகளை ஆராய்வதில், ரஷ்யா அதிக கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது. பல துறைகளில் நிலையான ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.

அணுசக்தி, மருத்துவம், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகள் துறைகளில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்தியா- யூரோசியன் பொருளாதார மண்டலம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து ஜனவரி மாத இறுதியில் இரு நாட்டு குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவையும் ஜெய்சங்கர் சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE