மழை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த தூத்துக்குடி - ஏரல் வியாபாரிகள்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நெல், வாழை, கொடிக்கால் வெற்றிலை விவசாயத்துக்கு மட்டுமின்றி குண்டூசி முதல் நகைகள் வியாபாரம் வரை பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், கடந்த 17, 18-ம் தேதிகளில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரல் நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில், ஏரல் நகரின் பிரதான பஜாரில் உள்ள மொத்த அரிசி விற்பனைக் கடைகள், மளிகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், இரும்பு, வெள்ளி மற்றும் நகைக்கடைகள் என, அனைத்து கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வியாபாரத்தை எதிர்நோக்கி ஜவுளி கடைகளில் வாங்கி வைத்திருந்த துணிகள் அனைத்தும் வீணாகின.

மொத்த மளிகை கடை வியாபாரி ஒருவர் கூறும்போது, “ எனது கடையில் ரூ.70 லட்சம் வரையிலான பொருட்கள் இருப்பு வைத்திருந்தேன். மழை வெள்ளத்தில் அனைத்தும் வீணாகிவிட்டது. ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தால் தான் மீண்டும் கடையை திறக்க முடியும். இந்த மழை வெள்ளம் எங்களை 40 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது” என்றார்.

அரிசி அரவை ஆலையில் இருந்த 5 ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன. மேலும், ஏரலில் உள்ள நெல் அரவை ஆலையில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கெட்டுவிட்டன. இதேபோல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், உரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் உள்ள பொருட்கள் வீணாகிவிட்டன.

இது குறித்து மாவட்ட திமுக அவைத் தலைவர் எஸ்.அருணாச்சலம் கூறும்போது, “ஏரல் பேருந்து நிலையத்தை சுற்றி தான் பிரதான பஜார் அமைந்துள்ளது. இதில் சுமார் 400 கடைகள் உள்ளன. குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதால் எப்போதும் பஜாரில் கூட்டம் இருக்கும். சிறிய நகராக இருந்தாலும் ஏரலில் தினமும் சுமார் ரூ.5 கோடி அளவில் வியாபாரம் நடைபெறும்.

செல்வ செழிப்பாக இருக்கும் ஏரல் நகரம் தற்போதைய மழையால் களையிழந்து காணப்படுகிறது. ஒவ்வொரு வியாபாரிகளும் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மளிகைக் கடைகளில் உள்ள பொருட்கள் மழையில் நனைந்து விட்டதால், அதனை குப்பையில் வீசி உள்ளனர். மழையால் சேதமான அரிசி மூட்டைகளை சிலர் குப்பையில் வீசிவிட்டனர். இதுபோல ஜவுளி, பேன்சி, இரும்பு வியாபாரம், நகைக் கடைகளும் பாதிக்கப் பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE