கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தை கட்டும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பில் தினசரி காய்கறி சந்தை கட்டும் பணி மற்றும் 26-வது வார்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு, ஆட்சியர் கே.எம்.சரயு, எம்பி செல்லகுமார், எம்எல்ஏக்கள் மதியழகன் ( பர்கூர் ), பிரகாஷ் ( ஓசூர் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய பணிகளைப் பூமி பூஜை செய்து, உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்துப் பேசியதாவது: கிருஷ்ணகிரி சந்தைப் பேட்டையில் 77 கடைகளுடன் கூடிய தினசரி காய்கறி சந்தை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியை 6 மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகமாகத் தினசரி காய்கறி சந்தை கார்னேசன் திடல் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.93.55 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள்: இதேபோல, பர்கூர் அருகே மரிமானப்பள்ளி, ஓசூர் அருகே சேவகானப்பள்ளி மற்றும் கொடியாளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ரூ.93.55 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களைச் சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தார். இதையடுத்து, அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் பள்ளி வகுப்பறைகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

ரூ.3.45 கோடி கல்விக் கடன்: தொடர்ந்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், 41 மாணவர்களுக்கு ரூ.3.45 கோடி கல்விக் கடனை அமைச்சர் வழங்கிப் பேசும்போது, ``கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 487 மாணவர்களுக்கு ரூ.40.71 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, ஆட்சியர் அலுவல கத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 3,896 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பாய், போர்வை மற்றும் தலையணைகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் வந்தனாகார்க், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகராட்சித் தலைவர் பரிதா நவாப், முன்னாள் எம்எல்ஏ முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நவாப், தொழிலதிபர் கேவிஎஸ் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE