சில்லறை விற்பனைக்காக சின்னமனூரில் முதற்கட்ட கரும்பு அறுவடை தொடக்கம்

By என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: சில்லறை விற்பனைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, பெரிய குளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெற்று வருகிறது. தைப் பொங்கலுக்கு அறுவடைக்கு வரும் வகையில் இவை நடவு செய்யப்படுகிறது. தற்போது பருவத்தை எட்டி உள்ளதால் சில்லறை விற்பனைக்காக முதற்கட்ட அறுவடை தொடங்கி உள்ளது.

குறிப்பாக, சின்னமனூர் வயல்களில் கரும்பு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. புறவழிச் சாலை ஓரங்களில் கரும்பு வயல்கள் அமைந்துள்ளதால், அப்பகுதியில் கரும்புக் கட்டுகளை காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பலரும் வாங்கிச் செல்கின்றனர். மேலும் சின்னமனூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் சில்லறை விற்பனைக்காக கரும்புகளை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

விவசாயி ஆறுமுகம்

இது குறித்து விவசாயி ஆறுமுகம் கூறியதாவது: "பொங்கல் நேரத்தில்தான் கரும்பின் தேவை அதிகரிக்கும். அப்போதுதான் முழு அறுவடையும் நடை பெறும். இப்போது சில்லறை விற்பனைக்காக கரும்புகள் அனுப்பப்படுகின்றன. பொங்கல் தொகுப்பாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு முழுக்கரும்பு தருவதால் கூட்டுறவுத் துறை மூலம், அப்போது மொத்தமாக கொள்முதல் நடைபெறும். அதற்காக கரும்புகளை பாது காத்து வருகிறோம்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE