ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஸ்ரீவில்லி.யில் களைகட்டும் பால்கோவா விற்பனை

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால், வில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டி உள்ளது. இருப்பினும், பால்வரத்து குறைவால் பால்கோவா உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான். அனைத்து இடங்களிலும் பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டாலும், வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கென தனித்துவமான சுவை, மணம் உண்டு. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் புகழ் பெற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாகவும் பால்கோவா உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களை மையப்படுத்தியே பால்கோவா விற்பனை நடைபெறுகிறது. இது தவிர தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை காலங்களில் பால்கோவா விற்பனை அதிக அளவு நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னரே பால் தட்டுப்பாடு மற்றும் கூலி உயர்வு காரணமாக, பால்கோவா கிலோவுக்கு ரூ.20 விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆண்டாள் கோயிலுக்கு வரும்போது, பால்கோவா வாங்கிச் செல்வர். தற்போது, ஆண்டாள் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், பால்கோவா விற்பனையும் களைகட்டி உள்ளது. ஆனால், பால் வரத்துக் குறைவால் போதிய உற்பத்தி இன்றி பால்கோவா தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பால் தட்டுப்பாடு காரணமாக பால்கோவா உற்பத்தி குறைந்து வருகிறது. தட்டுப்பாடு காரணமாக, குடிசைத் தொழில் புரிபவர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு சபரிமலை சீசனில் வழக்கத்தைவிட அதிகமான ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக, பால்கோவா விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பெரிய கடை முதல் சிறிய கடைகள் வரை பால்கோவா தட்டுப்பாடு நிலவுகிறது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE