5 ஆயிரம் அமெரிக்க வைரங்களை பயன்படுத்தி அயோத்தி ராமர் கோயில் வடிவத்தில் நெக்லஸ் தயாரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5 ஆயிரம் அமெரிக்க வைரங்களை பயன்படுத்தி ராமர் கோயில் வடிவில் ஒரு நெக்லஸ் தயாரித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை யொட்டி ஜனவரி 14-ம் தேதியே சிறப்பு யாக பூஜைகள் தொடங்க உள்ளன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரியான கவுஷிக் ககாதியா 5 ஆயிரம் அமெரிக்க வைரங்களை பயன்படுத்தி ராமர் கோயில் வடிவில் ஒரு நெக்லஸ் தயாரித்துள்ளார்.

இதுகுறித்து ராசேஷ் ஜுவல்ஸ் இயக்குநர் கவுஷிக் ககாதியா கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இக்கோயிலுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். அந்த அடிப்படையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வைரங்கள், 2 கிலோ வெள்ளியைப் பயன்படுத்தி ராமர் கோயில் வடிவில் நெக்லஸ் தயாரித்துள்ளேன். ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இதன் சரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இதை ராமர் கோயிலுக்கு பரிசளிக்கப் போகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE