எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்த 3 மாதம் அவகாசம்: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ‘மிக்ஜாம்’ புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் எம்.மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘மிக்ஜாம்’ புயலால் பெய்த அதிகனமழை காரணமாக, சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சிறு, குறு நிறுவனங்கள் அதிகளவில் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளன.

இந்த இயந்திரங்களை பழுது பார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர 2 மாதங்கள் வரை ஆகும். எனவே, நவம்பர் மாதத்துக்கான மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு 2024 பிப்.29-ம் தேதி வரை காலத்தை நீட்டித்து தரவேண்டும். மேலும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்துக்கான எவ்விதமான நிலையான கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது.சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் பாக்கி மற்றும் வட்டிதொகைகளை வசூலிப்பதை 3மாத காலத்துக்கு நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் ஏற்கெனவே மத்திய நிதியமைச்சரையும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளதை தொடர்ந்து வற்புறுத்தி அதற்கான உத்தரவை பெற்றுத் தரவேண்டும்.

அதேபோல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைகளுக்கு 6 மாதம் கால அவகாசம் தர வேண்டும். எக்காரணம் கொண்டும் வாராக் கடனை காரணம் காட்டி எம்எஸ்எம்இ நிறுவனங்களை சர்ஃபாசி சட்டத்தின் கீழ் அடமான சொத்துகளை எந்த வங்கியும் அடுத்த 6 மாதத்துக்கு முன்பு ஏலம்விடக்கூடாது. மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி துறைகள் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துக்கான வரி தொகைகளை அபராதமின்றி செலுத்த 3 மாதம் அவகாசம் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE