10 ஆண்டுகள், ரூ.5,336 கோடி: ராணுவத்துக்காக எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க ‘பெல்’ உடன் அரசு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புனேவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் (பெல்) 10 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ .5,336.25 கோடி செலவில் மின்னணு ஃப்யூஸ்களை வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம், இன்று கையெழுத்திட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, 10 ஆண்டு கால நீண்டகாலத் தேவைக்கான அரசின் முன்முயற்சியாக ‘இந்திய தொழில்துறையால் இந்திய ராணுவத்திற்கான வெடிமருந்துகள் தயாரிப்பின்’ கீழ் வெடிமருந்து கொள்முதல் செய்வதற்கான இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், வெடிமருந்து உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், முக்கியமான தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும், விநியோகச் சங்கிலித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள பொருட்களைப் பாதுகாப்பதற்கும் வெடிமருந்து கையிருப்பை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும் .

எலக்ட்ரானிக் ஃப்யூஸ்கள் நடுத்தரம் முதல் கனரக திறன் கொண்ட பீரங்கி துப்பாக்கிகளின் ஒருங்கிணைந்த அங்கமாகும், இது ராணுவ நடவடிக்கைகளுக்கு நிலையான பீரங்கி துப்பாக்கி சக்தியை வழங்குகிறது. வடக்கு எல்லையில் உள்ள உயரமான பகுதிகள் உட்பட பல்வேறு வகையான நிலப்பரப்பில் ஆபத்தான ஈடுபாடுகளைக் கொண்ட பீரங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்துவதற்காக ஃப்யூஸ் வாங்கப்படும். எலக்ட்ரானிக் ஃப்யூஸ்கள், பெல் நிறுவனத்தால் புனே மற்றும் தொடங்கப்பட உள்ள நாக்பூர் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும்.

இந்தத் திட்டம் ஒன்றரை லட்சம் மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் வெடிமருந்து உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட இந்திய தொழில் நிறுவனங்களின் செயலூக்கமான பங்களிப்பை ஊக்குவிக்கும், நாட்டில் வெடிமருந்து உற்பத்தி சூழல் அமைப்பையும் விரிவுபடுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE