மார்கழி ஸ்பெஷல்: வீட்டு வாசலை அலங்கரிக்க தயாராகும் பல வண்ண கோலப் பொடிகள்!

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: மார்கழி மாதம் தொடங்கி தை பொங்கல் வரை வீடுகளின் முன் பல வண்ணங்களில் கோலமிட்டு, அதன் நடுவே சாணியில் பூசணி பூ வைப்பது நம்மிடையே தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கமாக உள்ளது. இந்த பழக்கமானது, நாளடைவில் அடுக்குமாடி வீடுகள் வந்ததால், பல இடங்களில் குறையத் தொடங்கியது. சிறு உயிரினங்களுக்கு உணவாகும் என கருதி, நம் மூதாதையர் அரிசி மாவில் கோலமிட்டனர். ஆனால், தற்போது இந்த அதிவிரைவு நவீன உலகில் சிறு உயிர்களுக்கு உணவிடும் பழக்கமாக இல்லாமல், வீட்டின் முன்பு அழகுக்காக கோலமிடும் வகையில், கிரஷர் கல் தூளில் பல வண்ணங்கள் கலந்து தயாரிக்கப்படும் கோலப்பொடிகள் மூலம் கோலமிடுகின்றனர்.

தினந்தோறும் வீட்டின் முன் கோலமிட்டு வந்த நிலை மாறி, தற்போது விசேஷ நாட்களில் மட்டும் கோலமிடும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் கோலமிடுபவர்கள்கூட மார்கழி தொடங்கி பொங்கல் பண்டிகை வரை தினமும் வீட்டின் முன் கோலமிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் மார்கழி, தை மாதங்களில் கோலப்பொடி விற்பனை அதிகரிக்கிறது.இதுகுறித்து திண்டுக்கல் நகர் சட்டாம்பிள்ளை தெருவில் பல ஆண்டுகளாக குடும்பத் தொழி லாக வண்ண கோலப்பொடிகளை தயார் செய்து மொத்தமாக விற்பனை செய்து வரும் ஆர்.ஜோதி கூறியதாவது: எனது வீட்டிலேயே கடந்த 25 ஆண்டுகளாக கலர் கோலப்பொடிகளை தயாரித்து வரு கிறேன்.

ஒரே மூலப் பொருளில் நிறமிகளை சேர்த்து, பல வண்ணத்தில் கோலப்பொடிகளை தயாரிக்கிறோம். இதில் லெமன் மஞ்சள், மாம்பழ மஞ்சள், சிவப்பு, பச்சை, ரோஸ், ராமர் பச்சை, கத்தரிப்பு கலர், வாடாமல்லி, கனகாம்பரம், ஊதா, ஆனந்தாபுளூ உள்ளிட்ட 25 வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கிறோம். ஆண்டு முழுவதும் வண்ண கோலப்பொடிகளை தயாரிக்கிறோம், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களான மதுரை, கரூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

கோயில் திருவிழாக் காலங்களில் கோயில் நிர்வாகத்தினர் மொத்தமாக பல வண்ண கோலப்பொடிகளை வாங்கிச் செல்கின்றனர். மார்கழி, தை மாதங்களில் வீடுகளில் கோலமிட பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால், கோலப் பொடி விற்பனை இரு மடங்காக உயரும். தினமும் 500 பாக்கெட் கோலப்பொடிகள் தயாரிக்கும் நிலையில், மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது 1,000 பாக்கெட் கோலப்பொடிகளை தயாரிக்கிறோம். வீட்டிலேயே பெண்களை வேலைக்கு வைத்து தயாரிக்கிறோம். இத்தொழிலில் எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE