கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை பெறும் விவகாரம்: அரசு நிபந்தனை தொடர்பாக ஆணையம் விரைவில் முடிவு

By இல.ராஜகோபால்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தில், நிபந்தனைகளுடன் தமிழக அரசு ஒப்படைத்த நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) விரைவில் முடிவு செய்யும் என, விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். இதற்கிடையே, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் கடந்த 2010-ல் அறிவிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த நில ஆர்ஜித பணிகள் திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேகமெடுத்தது. மொத்தம் 558.87 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் குத்தகை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய ஆணையத்தின் தலைமை அலுவலகம் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி சார்பில் விரிவாக்க திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்த இடத்தில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறும்போது, “விரிவாக்க திட்டத்துக்கு 558.87 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை அடிப்படை மற்றும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய ஆணையத்தின் தலைமையகம் பரிசீலித்து வருகிறது. விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு நிலங்கள் பெறப்பட்டு உள் கட்டமைப்பு பணிகள் தொடங்கும். தற்போது, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ள நிலத்தில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும்போது, “நிலம் தயாராக உள்ளது. இதுகுறித்த விவரமும் கோவை விமான நிலைய நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பெற ஏஏஐ தலைமையகம் வெளியிடும் அறிவிப்பு குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) நிர்வாகிகள் வனிதா மோகன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது: கொங்கு மண்டல வளர்ச்சியில் கோவை சர்வதேச விமான நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றை விரைவில் பெற்று கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த விமான நிலைய ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இடநெருக்கடியால் கோவை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல் உள்ளது.

போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் வளாகத்துக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, புறப்பாடு டெர்மினல் பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மத்திய, மாநில அரசு இணைந்து ஓடு பாதை நீளம் அதிகரித்தல், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் பணிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகள் நிறைவடைந்தால் கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது: கரோனா தொற்று பரவலுக்கு முன் கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். தொற்று பரவலால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

சில மாதங்கள் வரை தினமும் அதிகபட்சமாக 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காணப்பட்டன. தற்போது தினமும் சராசரியாக உள்நாடு, வெளி நாடு பிரிவுகளில் மொத்தம் 23 விமானங்கள் இயக்கப் படுகின்றன. கடந்த நவம்பர் 26-ம் தேதி மொத்தம் 25 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு பிரிவில் இயக்கப்பட்ட 23 விமானங்களில் 5,399 பேர் வருகை, 4,189 பேர் புறப்பாடு, வெளிநாட்டு பிரிவில் 2 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் வருகை 351, புறப்பாடு 334 என அன்றைய தினத்தில் மட்டும் மொத்தம் 10,273 பயணிகள் விமான நிலையத்தை பயன் படுத்தியுள்ளனர். மூன்றாண்டுகளுக்கு பின் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. இத்தகவலை கோவை விமான நிலைய நிர்வாகம் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்