தேஜஸ் போர் விமானங்களை வாங்க நைஜீரியா, பிலிப்பைன்ஸ் அர்ஜென்டினா ஆர்வம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள் தயாராகின்றன. இவை வான் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படையில் ஏற்கெனவே சுமார் 40 தேஜஸ்போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 83 தேஜஸ் போர்விமானங்களை, விமானப்படைக்கு வாங்க கடந்த 2021-ம்ஆண்டில் இந்துஸ்தான் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.48,000 கோடி மதிப்பில்ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் கூடுதலாக 97 தேஜஸ் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது.

தேஜஸ் போர் விமானத்தின் செயல்பாடுகள், விலை ஆகியவைபல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்த அர்ஜென்டினா பாதுகாப்புத்துறை அமைச்சர், தேஜஸ் போர் விமானம் உட்பட இந்திய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை பார்வையிட்டார்.

இதுகுறித்து எச்ஏஎல் தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

நைஜீரியா, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தேஜஸ் போர் விமானத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. தேஜஸ் விமானத்தின் சில பாகங்கள் இங்கிலாந்தில் இருந்து வாங்கப்படுகின்றன.

1982-ம் ஆண்டு நடைபெற்ற ஃபக்லேண்ட்ஸ் போருக்குப்பின் அர்ஜென்டினாவுக்கு இங்கிலாந்து விநியோகிக்கும் ராணுவத் தளவாட பொருட்களை விற்க தடை உள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு அர்ஜென்டினாவுக்கு தேஜஸ் விமானங்களை விற்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அனந்த கிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE