கெலவரப்பள்ளியில் சாகுபடி பாதிப்பு: ஏரிகளில் வளரும் கீரை மூலம் வருவாய் தேடும் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப்பணி தொய்வு அடைந்துள்ள நிலையில், பாசன பகுதியில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரையைப் பறித்து விற்பனை செய்து விவசாயிகள் வருவாய் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழக எல்லையில் உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

8 ஆயிரம் ஏக்கர் பயன்: கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 42.28 அடியாகும். அணையின் வலதுபுறம் 22.6 கிமீ தூரமும், இடதுபுறம் 32.5 கிமீ தூரமும் உள்ளது. இதன் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு அணை கால்வாய் மூலம் செல்லும் நீர் மூலம் ஏரிகள் நிரம்பி அப்பகுதி விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

தண்ணீர் வெளியேற்றம்: இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. தற்போது வரை சீரமைப்பு பணி நிறைவடையாத நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், பாசனப் பகுதிக்கு நீர் கிடைக்காத நிலையில், சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வருவாயின்றி வேதனையில் உள்ளனர். இந்நிலையில், பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி ஆகிய பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரையைப் பறித்து, நகரப்பகுதியில் விற்பனை செய்து வருவாய் தேடி வருகின்றனர்.

கை கொடுக்கும் கீரை - இது தொடர்பாக கெலவரப்பள்ளி அணை பாசன விவசாயிகள் சிலர் கூறியதாவது: கெலவரப்பள்ளி அணை நீர் மூலம் பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி மற்றும் அனைத்து வகையான கீரைகளும் சாகுபடி செய்து வந்தோம். மதகு சீரமைப்புப் பணியால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், எங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்தது.

பயிர்களுக்குப் போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி பணியைக் கைவிட்டு, அன்றாட செலவுக்கு வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். வறண்ட ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரைகளைப் பறித்து விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே, பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE