மழை வெள்ளத்தில் மூழ்கிய மிளகாய், மல்லி பயிர்கள் - சாயல்குடி அருகே 1000 ஏக்கர் நாசம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கு மேல் மிளகாய், மல்லி உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 50 சதவீத கண்மாய், குளங்கள், பண்ணைக் குட்டைகள் நிரம்பி விட்டன. கமுதி, சாயல்குடி பகுதிகளில் ஓடைகள், வரத்து கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் காட்டாறு வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி வருகின்றன. இப்பகுதிகளில் மிளகாய், மல்லி, ஊடுபயிராக வெங்காயம் மற்றும் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப் படுகின்றன.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமி புரம், மாவிலோடை பகுதிகளில் இருந்து நீர்வழித் தடங்களில் மழைநீர் நிரம்பி அது வெளியேறி காட்டாறு வெள்ளமாக வந்தது. இத்தண்ணீர் மற்றும் மழைநீரால் உச்சி நத்தம், வி.சேதுராஜபுரம், கொண்டு நல்லான்பட்டி உள்ளிட்ட இப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் மேல் மிளகாய், மல்லி, உளுந்து மற்றும் ஊடு பயிராக விளை விக்கப்பட்டிருந்த வெங்காயம் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன.

இதனால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 2-வது முறையாக மறுபடியும் மிளகாய் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் இரட்டிப்புச் செலவாகும் என்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE