மனைவியை பிரிவதாக சிங்கானியா அறிவிப்பு - ரேமாண்ட் நிறுவன பங்குகள் ரூ.1,500 கோடி சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: உலகின் முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ரேமாண்ட் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் கவுதம் சிங்கானியா (58), தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவை பிரிந்து வாழப் போவதாக கடந்த 13-ம் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவருடைய சுமார் 12 ஆயிரம் கோடி சொத்தில் தனக்கு 75% பங்கு தர வேண்டும் என நவாஸ் மோடி கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 32 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சிங்கானியாவின் அறிவிப்பு வெளியான பிறகு ரேமாண்ட் நிறுவன பங்குகள் தொடர்ந்து 7-வது வர்த்தக நாளான நேற்றும் சுமார் 4% வீழ்ச்சி அடைந்தது. ஒரு வாரத்தில் 12% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன்மூலம் ரேமாண்ட் நிறுவன பங்குகள் ரூ.1,500 கோடி சரிந்துள்ளது.

இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் ஆய்வாளர் வருண் சிங்கூறும்போது, “கவுதம், தனது மனைவியை பிரிவதாக அறிவித்ததால் அந்நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நவாஸ் மோடி ரேமாண்ட் நிறுவன வாரிய உறுப்பினராக உள்ளதால், இந்த விவகாரம் கார்ப்பரேட் நிறுவன நிர்வாக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பங்கு விலை சரிகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE