அமேசான் தளத்தில் விரைவில் கார் வாங்கலாம்! - ஹூண்டாய் உடன் கூட்டணி

By செய்திப்பிரிவு

சியோல்: உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது மின்னணு வர்த்தகம். அதில் பிரதான நிறுவனமாக அமேசான் இயங்கி வருகிறது. சோப்பு, சீப்பு என தொடங்கி இதில் கிடைக்காத பொருட்களே இல்லை. இத்தகைய சூழலில் அமேசான் தளத்தில் ஆன்லைனில் கார் விற்பனை செய்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்காவில் வரும் 2024 முதல் ஆன்லைனில் கார் விற்பனையை தொடங்க உள்ளது அமேசான். இதன்மூலம் அமேசான் பயனர்கள் மிகச் சுலபமாக அதன் தளத்தில் கார்களை ஆர்டர் செய்து வாங்க முடியும். அதுவும் பயனர்கள் தங்களுக்கு பிடித்த கார்களை தெரிவு செய்து, அதற்கான தொகையை அமேசான் தளத்திலேயே செலுத்தலாம். அதன்பின்னர் பயனர்கள் அருகாமையில் உள்ள டீலர்கள் அல்லது டோர் டெலிவரி முறையில் கார்களை பெறலாம் எனத் தெரிகிறது. இது குறித்த விவரம் அமேசான் பிளாக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பயனர்கள் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தை இணைக்கும் ஒரு பலமாக அமேசான் இயங்குகிறது. இதில் அசல் விற்பனையாளர் பயனர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள டீலர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சில நாடுகளில் கார்கள் மற்றும் அதன் விலையை பயனர்கள் அமேசான் தளத்தில் ஒப்பிட்டு பார்க்கும் அம்சம் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE