“2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன” - எல்.முருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்கள் என்றும், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2023-ன் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், "2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் 16 அமைச்சகங்கள் இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து உள்கட்டமைப்புகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

2014-ம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்களே செயல்பாட்டில் இருந்தன. தற்போது 74 புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 200 விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மெட்ரோ ரயில் வழித்தடத்தைப் பொறுத்தவரை 2014-ம் ஆண்டு 4 நகரங்களில் மட்டுமே இந்த வசதி இருந்தது. தற்போது 15 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கழிவறை வசதிகள், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி போன்றவற்றை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 12 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டில் நாட்டில் 500 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புத்தொழில் சூழல் அமைப்பில் இந்தியா தற்போது உலகில் 3-வது இடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டில் உலகின் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேறும்.

புதிய கல்விக்கொள்கை, புத்தக அறிவை மட்டுமே வழங்காமல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் கல்வி கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் புதிதாக 7 ஐஐடிகள், புதிதாக 7 ஐஐஎம்-கள் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகளை மத்திய அரசு அதிகளவில் மேம்படுத்தியுள்ளது. சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிந்து தற்போது செயல்பாட்டில் உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலைப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் வழித்தடத்தின் காரணமாக தொழில் வளர்ச்சி அதிகரித்து சென்னையும், பெங்களூரும் இரட்டை நகரங்களாக மாறும்.

நாட்டில் 7 இடங்களில் பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் நிலையில், அதில் தமிழ்நாட்டின் விருதுநகரில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொள்முதல் முதல் ஏற்றுமதி வரை அனைத்திற்குமான ஒரே மையமாக இந்த ஜவுளிபூங்கா திகழும். நாட்டின் இரண்டு மாநிலங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்பட உள்ள நிலையில் அதில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் மூலம் பயண நேரம் குறைவதுடன், மக்களின் வாழ்க்கை முறை எளிதாகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் சமூக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப் பட்டுள்ளதுடன் அதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அமிர்தகாலத்தின் தொடக்கத்தில் உள்ள தேசம் 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த இலக்கை எட்ட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE