இக்லா விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனம்: இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் வினி யோகம் மற்றும் உற்பத்தி தொடர்பாக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இக்லா- எஸ் என்பது வீரர்களால் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஏவுகணை செலுத்தும் சாதனம் ஆகும். இதனை பயன்படுத்தி தனிப்பட்ட வீரர் ஒருவரே எதிரி நாட்டு விமானம் அல்லது ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு வீழ்த்த முடியும். இந்த ஏவுகணை சாதனம் ரஷ்ய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஏவுகணை சாதனத்தை இந்தியாவுக்கு வழங்குவதுடன் அதனை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமத்தை ரஷ்யா வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா- ரஷ்யா இடையே கையெழுத்தாகியுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ‘ரோசோபோரோன் எக்ஸ்போர்ட்’ தலைவர் அலெக்சாண்டர் மிகயேவ் கூறும்போது, “நாங்கள்ஏற்கெனவே அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இந்திய தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணை சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளோம்” என்றார்.

எனினும் எந்த இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணை சாதனம் தயாரிக்கப்பட உள்ளது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE