விதை, மருந்துக்கு பதிலாக பணம் மானியமாக வழங்க மானாவாரி விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவம் கடந்த புரட்டாசி மாதம் தொடங்கியது. இங்கு சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், குண்டு மிளகாய், நாட்டுரக கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பருத்தி சூரிய காந்தி, எள் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டது.

இங்கு உள்ள நிலங்கள் கரிசல், செவல், பொட்டல், குறுமண் போன்ற வகைகளாகும். கடந்த புரட்டாசி மாதம் விதைப்பு செய்து போதிய மழை பெய்யாததால் விதைகள் கெட்டுவிட்டன. அதனை மறுபடியும் உழுது விதைப்பு செய்தனர். சற்று தாழ்வான பகுதி நிலங்களில் முளைத்த விதைகள் மேட்டுப் பகுதியில் முளைக்கவில்லை. வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கியதால் பயிர்கள் வளமின்றி காணப் படுகின்றன.

தற்போது தொடர் மழை பெய்வதால் தாழ்வு பகுதி நிலங்களில் உள்ள பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மேலும், தொடர் மழையால் பயிர்களை சுற்றி களைகள் இடைவெளியின்றி வளர்கின்றன. நிலங்களில் அதிக ஈரம் காணப்படுவதால் களை பறிக்க முடியவில்லை. இதனால் களைகளை அழிக்க ரசாயன களைக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையே மானியத்தை பொருட்களாக வழங்காமல் கடந்த காலங்களை போல் பணமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: ஒரே கிராமத்தில் பல மண் தன்மையுடைய நிலங்கள் உள்ளன. செவல் மற்றும் குறுமண் நிலங்களில் பருப்பு வகைகளும், பொட்டல் நிலங்களில் வெள்ளைச்சோளம், எள், பயறு வகைகளும், சுத்த கரிசல் நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், கொத்தமல்லி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவை பயிரிடுவார்கள். கடந்த காலங்களில் அரசு விவசாயிகளுக்கு உழவு, விதை, உரம், மருந்து, தெளிப்பு, மகரந்த சேர்க்கைக்கு என மானியத்தை பணமாக வழங்கியது.

ஆனால் கடந்த 2.5 ஆண்களாக மானியத்தை பணமாக வழங்காமல் விதை, மருந்து, உரம் என வழங்கி வருகிறது. அந்தந்த பகுதி நிலங்களுக்கேற்ற வகையில் விதை, உரம், மருந்து வழங்காமல் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் காயாக ஊன்றி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அரசு காயாக வழங்காமல் விதையாக வழங்குகிறது.

விதை பதியம் போட்டு அதை பறித்து நிலங்களில் ஊன்றுவது விழுப்புரம், பாவூர்சத்திரம், நாமக்கல் போன்ற பகுதியில் விவசாயம் செய்கின்றனர். வெங்காயம் விதை மூலம் இங்கு விவசாயம் செய்யப்படுவதில்லை. மேலும், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், ராமநாதபுரம், விருதுநகர் பகுதிகளில் நாட்டுரக கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் அரசு வடமாவட்டம் மற்றும். ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் பயிரிடுகின்ற லயன் கொத்தமல்லி விதைகளை தென் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குகிறது.

நாட்டு ரக கொத்தமல்லி மிகவும் மனமுள்ளதாகவும், காரத்தன்மையாகவும் இருக்கும். லயன் கொத்தமல்லி, மனமோ, காரத்தன்மையோ இருக்காது. பெரும்பாலும் இப்பகுதியில் அதிகமாக முண்டு வத்தல் எனப்படும் குண்டு வத்தல் மானாவாரி நிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் அரசு சம்பா வத்தல் விதையை வழங்குகிறது. ஒவ்வொரு பகுதி மண்ணுக்கும் ஒவ்வொரு விதமான பயிர்கள் அதிக விளைச்சலை தரும்.

ஆனால் அதைவிடுத்து பயிரிட முடியாத விதைகளையும், பயன்படுத்த முடியாத மருந்துகளையும், மண்ணிற்கேற்ற விதைகளை வழங்காமல் எந்தப் பயனும் இல்லை. எனவே, கடந்த காலங்களில் வழங்கியது போல விதை, உரம், மருந்து இவற்றை பொருளாக வழங்காமல் பணமாக மானியம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

மேலும்