தீபாவளி | ஆவின் இனிப்புகள் இதுவரை ரூ.60 கோடிக்கு விற்பனை: பால்வளத்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் இனிப்பு வகைகள் தற்போது வரை ரூ.60கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

ஆவின் பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் 8.33 சதவீதம் மற்றும் கருணைத்தொகை 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டார். அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தீபாவளி மிகை ஊதியம், கருணை தொகையாக ரூ.5.96 கோடி வழங்க முடிவு செய்து, நந்தனம் ஆவின் இல்லத்தில் பணியாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் விற்பனை கடந்த ஆண்டைவிட கூடுதலாக 20 சதவீதம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்தாண்டு ரூ. 115 கோடிக்கு விற்பனையானது. இந்த ஆண்டு ரூ. 149 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது வரை ரூ. 60 கோடிக்கு மேல் ஆவின் இனிப்பு வகைகள் விற்பனையாகியுள்ளது.

பால் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதனை சீர் செய்யவே விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கி, பால் பண்ணைகளை தொடங்க கூறி வருகின்றோம். பால் தேவை அதிகரித்து இருந்தாலும் சீரான அளவில் பால் கொள்முதல் நடைபெறுவதால் தட்டுப்பாடு பற்றி பயப்பட வேண்டாம்.

ஆவின் நிர்வாகத்தில் 9.5 சதவீதம் மின் இழப்பை குறைத்து, ரூ. 45 லட்சம் சேமித்து உள்ளோம். ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை அதிகரிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால், தற்போதைக்கு ஆவின் குடிநீர் தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார்.

பேட்டியின்போது, ஆவின் மேலாண்மை இயக்குநர் சு.வினீத், முதன்மை விழிப்புக்குழு அலுவலர் பண்டி கங்காதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE