கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் - 2 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் மட்டும் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் தொழிலில் வங்க தேசம், வியட் நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு துணிகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால், உள்நாட்டு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேக மானியம் உள்ளிட்ட சலுகைகள் இல்லாததால், குறைந்த செலவில் துணிகளை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, நிலை கட்டணம் மற்றும் பீக் ஹவர் மின் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகளால், தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 25-ம் தேதி வரை தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2 மாவட்டங்களில் நாள் தோறும் ஒரு கோடி மீட்டர் என, ரூ.50 கோடி மதிப்பிலான துணிகள் விசைத்தறி மூலமாக உற்பத்தியாவது நிறுத்தப்பட்டுள்ளது. 20 நாள் தொடர் போராட்டத்தின் காரணமாக, ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE