500-க்கும் மேற்பட்ட ‘ஓபன் எண்ட்' நூற்பாலைகள் நவ.7-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி, கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட ஓஇ நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப்பஞ்சைப் பயன்படுத்தி, தினமும் 25 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே மின் கட்டணஉயர்வால் தொழில் துறையினர்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இச்சூழலில், ஓஇ நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்துவருவது, உற்பத்தியை மேலும் பாதித்துள்ளது.

தற்போது கோம்பர் ரக கழிவுப் பஞ்சு கிலோ ரூ.118-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.97-க்குகிடைத்தால்தான் ஓஇ நூற்பாலைகளுக்கு பயன் தரும்.

எனவே, தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். கழிவுப்பஞ்சு விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு கழிவுப் பஞ்சுஏற்றுமதிக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளதைப்போல, ஓஇ நூற்பாலைத் துறைக்கு தமிழக அரசு சிறப்பு சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்க வேண்டும்.

புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஓஇ நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE