குறைந்த அளவே இழப்பீடு வழங்குவதால் தமிழகத்தில் பயிர்க் காப்பீடு செய்ய குறைந்து வரும் ஆர்வம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: குறைந்த அளவே இழப்பீடு வழங்குவதால், சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 1.40 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், இதுவரை 14,616 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.

நிகழாண்டு ரபி சிறப்பு பருவத்தில் திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாளாகும். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம், பியூச்சர் ஜெனராலி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் விவசாயிகளிடமிருந்து பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.542 வசூலித்து வருகின்றன. இந்தத் தொகையை இ - சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் செலுத்தி வருகின்றனர். நிகழாண்டு சம்பா பருவத்தில் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், நேற்று வரை 14,616 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தியுள்ளனர். இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மீதமுள்ள விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

குறையும் இழப்பீட்டுத் தொகை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு சம்பா பருவத்தில் கடுமையாக மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கைக் கொடுக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு ரூ.36 லட்சத்தை மட்டுமே காப்பீடு நிறுவனங்கள் வழங்கின.

அதேபோல, கடந்த 2022-2023 சம்பா பருவத்தில் ரூ.16 கோடியை விவசாயிகள் பிரீமியமாக செலுத்தியிருந்தனர். அப்போது பருவம் தவறி பெய்த மழையால் மாவட்டத்தில் பெருமளவு மகசூல் பாதிக்கப்பட்டது. ஆனால் காப்பீடு நிறுவனங்களோ வெறும் 7 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1.13 கோடி மட்டும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கின.

கடந்த 2 ஆண்டுகளில் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டும் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய ஆர்வம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச் சந்தர் கூறியது: பயிர்க் காப்பீடு செய்யும் விவசாயிகளுடைய நிலங்களில், சோதனை அறுவடையை விவசாயிகள் முன்னிலையில் தான் செய்ய வேண்டும், ஆனால் காப்பீடு நிறுவனங்கள் அப்படி செய்யாமல், வேளாண்மைத் துறையின் அறிக்கையின்படி இழப்பீடு வழங்குவதாக கூறுகின்றன.

இதனால், உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காத காரணத்தால், தற்போது விவசாயிகள் பலரும் காப்பீடு செய்ய முன்வரவில்லை. காப்பீடு நிறுவனங்களின் மீது விவசாயிகள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது தான் இதற்கு காரணம். எனவே, தமிழக அரசே பயிர்க் காப்பீடு திட்டத்தை முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE