அக்டோபர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது. கடந்த அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1,72,003 கோடியை எட்டியுள்ளது. இதற்கு முன்பாக, நடப்பாண்டு ஏப்ரலில் தான் அதிகபட்சமாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது. அதற்குப்பிறகு, இரண்டாவது அதிகபட்சமாக அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

இந்த மொத்த வசூலில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.30,062 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.38,171 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.91,315 கோடியாகவும், செஸ் ரூ.12,456 கோடியாகவும் இருந்தன.

வருவாய் பங்கீட்டின்படி, அரசு ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.42,873 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.36,614 கோடியும் ஒதுக்கியது. வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு, 2023 அக்டோபரில் மத்திய மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ.72,934 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி ரூ.74,785 கோடியாகவும் இருந்தது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE