புதுப்பிக்கப்படாத கால்நடை காப்பீடு: அவதிக்குள்ளாகும் நீலகிரி விவசாயிகள்

By ஆர்.டி.சிவசங்கர்


மசினகுடி: நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை, காய்கறி விவசாயம். விவசாயத்தை சார்ந்து கால்நடைகளையும் விவசாயிகள் வளர்த்து வருவாய் ஈட்டி வருகின்றனர். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளுக்கு இலவசமாக கறவை மாடுகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு 35 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இன்றைக்கு நாளொன்றுக்கு 11 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய, அருகில் உள்ள கோவை மாவட்டத்திலிருந்து தினந்தோறும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் வளம் குறைந்ததற்கு கால்நடைகளின் மேய்ச்சல் நிலப்பரப்பு குறைந்ததும், வனத்துறையின் கட்டுப்பாடுகள் அதிகரிப்புமே காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தீவனப் பற்றாக்குறை, மேய்ச்சல் பரப்பு சுருங்குவது, தேயிலை பரப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், பால் உற்பத்தியும் குறைந்து, கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கால்நடைகளுக்கான காப்பீடு புதுப்பிக்கப்படாததால் கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நீலகிரி மக்கள் சேவை மைய தலைவர் சு.மனோகரன், செயலாளர் ஆல்துரை ஆகியோர் கூறியதாவது: தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ், மத்திய அரசால் கால்நடை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் 10 சதவீதத்தில், ஒரு சதவீதத்தை மட்டும் கால்நடை வளர்ப்போர் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் மூலமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், நீலகிரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 28,000 கால்நடைகள் உள்ளன. ஆனால், 2022-23-ம் நிதி ஆண்டில் 1,071 கால்நடைகளுக்கு மட்டுமே மத்திய அரசின் காப்பீட்டு சான்றிதழ் கிடைத்துள்ளது.

சிறியூர் கிராமத்தில் வளர்க்கப்படும் மாடுகள்.

விண்ணப்பங்கள் தட்டுப்பாடு: கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் விண்ணப்பங்களை வழங்க வேண்டிய கால்நடை பராமரிப்பு மையங்கள், ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே விண்ணப்பங்கள் வருகின்றன. விவசாயிகள் கேட்கும்போது இன்னும் விண்ணப்பம் வரவில்லை என்ற பதிலே வருகிறது.

இதனால், நடப்பு ஆண்டில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர், காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். 2021-ம் ஆண்டு காப்பீடு செய்யப்பட்ட கால் நடைகளை கூட 2022-ம் ஆண்டு காப்பீடு செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் பிரீமியம் செலுத்தினால் மட்டுமே, இறந்துபோகும் கால்நடைகளுக்கு காப்பீடு பெற முடியும்.

நீலகிரி மாவட்டத்தின் காலநிலை காரணமாக பல்வேறு நோய்களாலும், வன விலங்குகள் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டு அதிகளவில் கால்நடைகள் உயிரிழக்கின்றன. எனவே, இந்த கால்நடைகளுக்கு காப்பீடு கிடைக்காததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

மேலும், புதிதாக எந்த வங்கியும் விவசாயிகளுக்கு கால்நடை வாங்க கடன் தராது. எனவே, மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசின் இத்திட்டத்தில் அனைத்து கால்நடைகளையும் கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறியூர் கிராம கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கூறும்போது, "கால்நடைகள் மட்டுமே இந்த மாவட்டத்தின் பூர்வகுடிகளின் வாழ்வாதாரமாக இருந்தபோது, 70 ஆயிரத்துக்கும் மேல் கால்நடைகள் இருந்தன. ஆனால், தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், வெளி மாவட்டங்களில் இருந்து பால் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதில் சுணக்கம் நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தின் காலநிலை காரணமாக கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டிய அரசு துறை, திட்டங்களை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டுகிறது. எனவே, இப்பிரச்சினையை ஆய்வுசெய்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் அவலத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE