ஈரோட்டின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும்: ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் நிறுவன தலைவர் எதிர்பார்ப்பு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ‘ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. மாநிலத்தின் மொத்த ஜிடிபியில் ஈரோட்டின் பங்கு 17 சதவீதம். ஆனாலும், தொழில் மாவட்டத்துக்கான அங்கீகாரத்தை ஈரோடு பெறவில்லை என்பதுதான் எங்களைப் போன்றவர்களின் ஏக்கமாக உள்ளது என ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் தயாரிப்பு நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான பி.செல்வசுந்தரம் தெரிவித்தார்.

கட்டுமானத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ரெனாட்டஸ் கட்டுமான நிறுவனத்தின் ஒரு அங்கமாக, ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை சார்ந்த ஈரோடு மாவட்டத்தில், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தேவைகள் குறித்து ‘ரெனாகான்’ நிறுவன நிர்வாக இயக்குநர் பி.செல்வசுந்தரம் கூறியதாவது:

ஈரோட்டின் தொழில்துறையின் வளர்ச்சியின் அடையாளங்களாக விளங்கும் பிரபல நிறுவனங்களின் பட்டியலை முதலில் சொல்கிறேன். ராம்ராஜ் காட்டன், எம்.சி.ஆர், கே.கே.பி.லுங்கிகள் மற்றும் டெக்ஸ்வேலி என்ற ஜவுளி வளாகம் உள்ளிட்ட ஜவுளி நிறுவனங்கள், சக்தி மசாலா, ஆதித்யா மசாலா, டேஸ்டி மசாலா, மில்கி மிஸ்ட், மில்கா பிரட், அமிர்தா பால், எஸ்.கே.எம். பூர்ணா ஆயில், எஸ்கேஎம் குழுமத்தின் மாட்டுத்தீவனம், முட்டை, ஹெர்போதையா உள்ளிட்ட உணவு மற்றும் மருத்துவம் சார்ந்த தொழிற்சாலைகள், டிஸ்கவுண்ட் சோப், அமிர்தா வெட் கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அக்னி ஸ்டீல்ஸ் போன்ற கட்டுமான பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களுக்கு இணையாக தேசிய அளவில் கட்டுமானங்களை அமைத்து வரும் என்.ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்ஸ், யு.ஆர்.சி., கட்டுமான நிறுவனம், பி அண்டு சி கன்ஸ்டிரக்சன்ஸ், ஆர்.பி.பி. இன்ப்ரா புராஜெக்ட்ஸ்,சி.எம்.கே பில்டர்ஸ், சத்தியமூர்த்தி அண்டு கோ, ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாலத்தீவு மொரிசியஸ் மற்றும் பல நாடுகளில் மெட்ரோ ரயில், ஏர்போர்ட் போன்ற பல கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் எங்களது நிறுவனமான ரெனாட்டஸ் புராஜெக்ட்ஸ், போன்ற கட்டுமானம் தொடர்பான புதிய தொழில் நுட்பத்தோடு செயல்படும் தொழில் நிறுவனங்கள் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றன.

சுதா மருத்துவமனை, கே.எம்.சி.எச். மருத்துவமனை, கல்யாணி கிட்னி சென்டர், செந்தில் பல்நோக்கு மருத்துவமனை போன்ற பிரபல பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளன.

மேலும் கோரல் ரீவைண்டிங் என்ற நிறுவனம் எனர்கான் விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து இந்தியாவிலேயே ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆறு மெகா வாட் விண்ட் மில் தயாரிக்கிறது.

ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையம். டெக்ஸ்டைல்ஸ் துறையின் மையமாக விளங்குகிறது. பல்லவா குழுமங்களின் நிறுவனமான வி.எஸ்.எம் வீவ்ஸ், சேரன் ஸ்பின்னர்ஸ், தேசிய அளவில் பிரபலமான மோத்தி ஸ்பின்னிங் மில்ஸ் போன்ற பெரிய பல நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதிலும் முன்னணி வகிக்கின்றன.

இவ்வளவு தொழில் நிறுவனங்கள் இருந்தும் ஈரோட்டின் முக்கியத்துவம், இன்னும் பலருக்கும் தெரிவதில்லை என்பதுதான் எங்கள் வருத்தம்.

இதனால் தொழில்துறையினர் எவ்வகையான பாதிப்புகளை எதிர்கொள்கிறீர்கள்?

ஈரோட்டில் இயங்கும் நிறுவனங்கள் கார்ப்பரேட் தன்மையுடன் இயங்கி வருகிறது. இதற்கு, இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரி, மனிதவளம் சார்ந்த அதிகாரிகள் போதுமான அளவு இல்லை. தொழில்நுட்பம், நிர்வாகம் படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கோவை போன்ற இடங்களிலேயே பணியாற்ற விரும்புகின்றனர். பெரு நகரங்களில் கொடுக்கும் சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை நாங்கள் கொடுக்க தயாராக இருந்தும், இவர்கள் ஈரோட்டில் பணிபுரிய முன்வருவதில்லை.

இங்கு பெருநகரங்களில் உள்ளது போல், நட்சத்திர ஹோட்டல், ஷாப்பிங் மால், உணவகங்கள், கூட்டம் மற்றும் கண்காட்சிகள் நடத்த வசதியான அரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் போன்ற வசதிகள் இல்லை. பெரு நகரங்களில் உள்ள வாழ்க்கை முறையை பின்பற்றும் அவர்கள், ஈரோட்டிற்கு வர விரும்புவதில்லை.

சி.ஐ.ஐ. போன்ற அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து பேசி வருகிறோம். ஈரோட்டின் மொத்த தொழிலதிபர்களும் ஒன்றிணைந்து, ஒளிரும் ஈரோடு என்ற அமைப்பைத் தொடங்கி, ஈரோட்டின் பெருமையை வளர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறோம். ஈரோட்டை பெருநகரங்களுடன் இணைக்கும் வகையில் சாலை வசதியை அரசு மேம்படுத்த வேண்டும்.

ஈரோடு ஜவுளி, தோல் தொழிற்சாலைகளால் நீர் மாசடைவது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறதே?

பெரிய நிறுவனங்கள் அனைத்தும் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுகின்றன. சிறிய அளவில் தொழில் செய்பவர்களின் தவறுகளால், ஒட்டு மொத்த தொழில்துறைக்கும், கெட்ட பெயர் ஏற்படுகிறது. இங்கு முன்னணி தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் அனைவரும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊர் பாதிக்கப்பட நாங்கள் எப்படி காரணமாக இருப்போம்?

தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பங்களிப்பு அதிகரித்து இருப்பதையும், நமது தொழிலாளர்கள் திறன் குறைந்து வருவதாகவும் சொல்லப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

இதுவும் தவறான கருத்து. தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவது உண்மை. அவர்களை சார்ந்து மொத்த நிறுனங்களும் இருப்பதாகக் கூறுவது சரியானதல்ல. ஈரோட்டைப் பொறுத்தவரை 90 சதவீத உள்ளூர் தொழிலாளர்கள் திறன் வாய்ந்தவர்களாக, கடுமையாக உழைக்கக் கூடியவர்களாகவே இருக்கின்றனர். எங்கள் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள், அவர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்து, திறன் வாய்ந்த தொழிலாளர்களாக உருவாக்குகிறோம்.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாமிடத்தில் உள்ள நமது நாட்டை, 3-வது இடத்துக்கு கொண்டு வருவோம் என உலக நாடுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

அதேபோல், எங்கள் ஊரான ஈரோட்டை அனைத்து வசதிகளும் கொண்ட தொழில்நகராக மாற்றுவதோடு, உலகம் அதனை அறியச் செய்வோம் என்ற நம்பிக்கை மற்றும் உறுதி எங்களுக்கும் இருக்கிறது. அதனை நாங்கள் ஒன்றிணைந்து செய்து காட்டுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE