தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது எப்படி?: தொழில் ஆளுமைகள் பங்கேற்ற கலந்துரையாடல்

By கி.மகாராஜன் 


மதுரை: இந்தியாவில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் யுகத்தில் தொழில் தொடங்குவது, சந்தைப்படுத்துவது, நிதி திரட்டுவது உள்ளிட்ட விஷயங்களை முன்னெடுக்கும் வகையில், மதுரையில் நேற்று ‘இந்து தமிழ் திசை'யின் ‘வணிக வீதி- தொழில்முனைவோருக்கான களம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்' இந்த நிகழ்ச்சியை வழங்கியது. ‘ஃபேம் டிஎன்' மற்றும் ‘தமிழ்பிரனர்' ஆலோசனை வழங்கின. பிஎன்ஐ அமைப்பு ஆதரவு வழங்கியது.

இதில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமுன்னாள் தலைவர் எஸ்.ரத்தினவேல், கோவை லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன், ‘குவி' நிறுவன சிஇஓ அருண் பிரகாஷ், ‘மைண்ட் அண்ட் மாம்' சிஇஓ பத்மினி ஜானகி, ‘அனோவா' நிறுவனர் மற்றும் ஏஞ்சல் இன்வெஸ்டர் சந்திரசேகர் குப்பேரி, ‘தமிழ்பிரனர்' சிஇஓ ஷ்யாம் சித்தார்த், மதுரை மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் சி கணேசன் உரையாற்றினர்.

தமிழ்நாடு வர்த்தக சங்க முன்னாள் தலைவர் எஸ்.ரத்தினவேல் பேசும்போது, “உலக அளவில் பொருளாதார ரீதியில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2030-க்குள் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைக்குச் செல்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்காமல், தொழில்முனைவோராக மாற வேண்டும். அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாகி வருகின்றன. இது ஸ்டார்ட்-அப் காலம். இந்த காலகட்டத்தில் தொழில் தொடங்க பணம் பிரதானம் இல்லை. நல்ல யோசனை இருந்தால் எளிதில் தொழில் தொடங்க முடியும்” என்றார்.

கோவை லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன் பேசும்போது, “வெற்றி முனைப்புடனும், துணிந்தும் தொழிலில் இறங்க வேண்டும். சவால்களையும், அவமானத்தையும் கண்டு பயப்படக் கூடாது. அவைதான் அடுத்த நிலைக்கு முன்னேற உதவும். யோசித்துக்கொண்டே இருக்காமல் செயலில் இறங்கினால்தான் முன்னேற முடியும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் மற்றும் எம்பிஏ மாணவர்கள் கலந்துகொண்டனர்.

‘இந்து தமிழ் திசை' தலைமை இயக்கக அலுவலர் ஷங்கர் வி.சுப்பிரமணியம், `குரூப் எம்' பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை' முதுநிலை உதவி ஆசிரியர் முகம்மது ரியாஸ் கலந்துரையாடல் நிகழ்த்தினார். மதுரை மண்டல இணை மேலாளர் ரேகா வரவேற்றார். மதுரை விற்பனைப் பிரிவு மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE