சூழலியல் பாதிக்காத வகையில் உற்பத்தி: லண்டன் கருத்தரங்கில் திருப்பூர் தொழில் துறையினர் அறிக்கை சமர்ப்பிப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நகரில் நடைபெற்ற ‘வளங்குன்றா உற்பத்தி' கருத்தரங்கில் பங்கேற்று, திருப்பூர் தொழில்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியம் கூறியதாவது: பின்னலாடை உற்பத்தியின் பின்னணியிலுள்ள பல்வேறு வளங்குன்றா உற்பத்தி கோட்பாடுகள் குறித்த விவரங்களை உலகளவில் எடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், டெக்ஸ்டைல் எக்ஸ் சேஞ்ச் எனும் அமைப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உறுப்பினராக 2 மாதங்களுக்கு முன் இணைந்தது. இந்த அமைப்பு 21 ஆண்டுகளாக சூழலியல் பாதிக்காத உற்பத்தி குறித்தான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பில், உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளர்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஓர் அமெரிக்க அல்லது ஐரோப்பிய நகரத்தில் 5 நாட்கள் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சியை நடத்தி, அன்றைய தேதியில் சூழலியல் பாதிக்காத உற்பத்தி கோட்பாடுகள் மற்றும் சிறந்த செயல்பாடுகள் குறித்து பல்வேறு தலைப்புகளில், உலகளவில் இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகள் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு லண்டன் மாநகரில் கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றன. இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இன்றைய தினம் டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச் நிபுணர்களுடன்,

திருப்பூரின் வளங்குன்றா உற்பத்தி முறைகள் குறித்து எடுத்துக் கூறி, அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக, பூஜ்ய முறை சாயக்கழிவு நீர் சுத்திகரித்தல், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி, 8 ஆண்டுகளில் 17 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறு சுழற்சி, துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரித்தல்,

மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் நெகிழி மற்றும் குளங்களை சுத்திகரித்து பாதுகாத்தல், பராமரித்தல், கல்வி, பெண்களுக்கான வேலை வாய்ப்பு, சமூக பங்களிப்பில் திருப்பூர் தொழில் துறையினர் உட்பட பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளனர். இதில், உலகம் முழுவதிலும் இருந்து 1,300 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE