கோவையில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க திட்டம்: தொழில்துறையினருடன் ஆட்சியர் கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

கோவை: துணி நூல் துறை சார்பில் கோவையில் சிறு ஜவுளிப் பூங்கா அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்து பேசியதாவது: ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் ( பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் ) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும்.

தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளித் தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார். தொடர்ந்து தொழில் முனைவோர் தங்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

துணி நூல்துறை மண்டல துணை இயக்குநர் ராகவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், தென்னிந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் ஜெகதீஸ் சந்திரன் உள்ளிட்ட தொழில்முனைவோர் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE