புவிசார் குறியீடு பெற்ற ஜவுளி ரகங்களுடன் கூடிய கைத்தறி கண்காட்சி சேலத்தில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சேலம்: புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்களுடன் கூடிய மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி சேலத்தில் நாளை தொடங்குகிறது, என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கைத் தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன், மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அளவிலான கைத் தறி கண்காட்சி சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல் நோக்கு அரங்கத்தில் நாளை (27-ம் தேதி) முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்களான சேலம் வெண்பட்டு வேட்டி, திருபுவனம் பட்டு சேலை, காஞ்சிபுரம் பட்டு சேலை, கோவை கோரா காட்டன், மதுரை சுங்குடி சேலை, திருநெல்வேலி செடி புட்டா சேலை, ஈரோடு பவானி ஜமக்காளம் ஆகியவையும், கடலூர் குறிஞ்சிப் பாடி லுங்கி, கரூர் பெட் ஷீட், சென்னிமலை பெட்ஷீட், துண்டு, மெத்தை விரிப்பு, கால் மிதியடி ஆகிய கைத் தறி ரக ஜவுளிகளும், 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும், கைவினை மற்றும் காதிப் பொருட்கள் (வீட்டு உபயோகப்பொருட்கள்) ஆகியவையும் விற்கப்பட உள்ளது. கண்காட்சி மூலமாக, ரூ.3 கோடி அளவுக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். பொது மக்கள் அனைவரும் கைத் தறித் துணிகள், கைவினைப் பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE