இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 20) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதற்கு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்வதே முதன்மைக் காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு நாட்களில் ரூ, 1,160 தங்கம் உயர்ந்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,500 ஆக இருக்கிறது.

“இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடரும் சூழலில், சர்வதேச அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். இதனால், தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போர் முடியும் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE