புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க பெண்கள், இளைஞர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் மனோ தங்கராஜ்

By செய்திப்பிரிவு

கோவை: புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அன்னூர் அருகே ஊத்துப் பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்காக ரூ.25 லட்சம் மதிப்பில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பான் நிலையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்து, கறவைமாடு பராமரிப்புக்கான வட்டியில்லா கடனுதவிகளை வழங்கினார்.

பின்னர், ராமகிருஷ்ணாபுரம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன பெட்ரோல் பங்க்-கில் ஆவின் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: தமிழ்நாட்டில் பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 லட்சம் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பாலின் தரத்துக்கு ஏற்ற விலை, தற்போது வழங்கப்படுகிறது.

பால் கொள்முதலுக்கான தொகை 10 நாட்களுக்கு ஒருமுறை முகவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஊத்துப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தரமான பாலை வழங்கிய பால் உற்பத்தியாளருக்கு லிட்டருக்கு ரூ.36.63 வழங்கப்பட்டது. கோவை மாவட்ட ஆவின் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் 120 பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு சிறிய மாட்டுப் பண்ணைகள் அமைக்க மாவட்ட தொழில் மையம், தாட்கோ, டாம்கோ மூலமாக மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். புதிய ஆவின் பாலகம் அமைக்க படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள், கணவரை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆவின் பால் மூலம் உற்பத்தி செய்யக் கூடிய பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆவின் பொருட்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் ஆவின் விற்பனை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீதம் ஆர்டர் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்த குமார், ஆவின் பொது மேலாளர் பால பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE