சீசனில் 20 லட்சம் டன் உற்பத்தி: ஓய்வுக்கு செல்லும் உப்பு வயல்கள்!

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில்

குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி முன்கூட்டியே தொடங்கியது.

அதுபோல இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் பெய்யவில்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக மாவட்டத்தில் தற்போது வரை 80 சதவீதம், அதாவது 20 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளது. கடந்த ஆண்டு 60 சதவீதம் அளவுக்கு, அதாவது 15 லட்சம் டன் அளவுக்கே உப்பு உற்பத்தி இருந்தது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

விலை குறைந்தது: இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 80 சதவீதம் அளவுக்கு உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது.

ஆனால், உப்பு விலை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு தரத்துக்கு ஏற்ப ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையே விற்பனையாகிறது. மாவட்டத்தில் தற்போது சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் டன் உப்பு கையிருப்பில் உள்ளது. இது அடுத்த ஆண்டுக்கான உற்பத்தி தொடங்கும் பிப்ரவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE