வணிக நூலகம்: அறிவைத் திருடலாம் தப்பில்லை!

By செல்வேந்திரன்

பு

கழ்பெற்ற எழுத்தாளரான க்லீயான், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் வாழும் ஒரு கேலி சித்திரக்காரர் மற்றும் எழுத்தாளர். கற்பனைத்திறனையும் படைப்பூக்கத்தையும் வலிந்து உருவாக்கிக்கொள்ள சிறிதாக கலாப்பூர்வமாக திருடிக்கொள்ளலாம் என்பதே இவரது முதல் நூலான ஸ்டீல் லைக் அன் ஆர்ட்டிஸ்ட் நூலின் அடிநாதம். 2012-ஆம் ஆண்டு வெளியான இச்சிறு நூல் நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லராக இன்றளவும் நீடிக்கிறது.

நீங்கள் மாபெரும் ஜீனியஸாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். படைப்பூக்கத்திற்கான விதை எங்கும் எவரிடமும் நிறைந்திருக்கிறது. சற்று விழிப்புடன் கவனித்து அவற்றை கலாப்பூர்வமாக மாற்ற முடியும் என்கிறார் ஆஸ்டின். இளம் எழுத்தாளர்களுக்கு அல்லது கலைத்துறையினருக்கான நூல் இது என மேம்போக்காக தோற்றமளித்தாலும், இந்நூல் தொழில்துறையினருக்கு குறிப்பாக வளரும் தொழில் அதிபர்களுக்குப் பெரிதும் உதவக்கூடியது. படைப்பூக்கத்துடன் செயல்பட ஆஸ்டின் தரும் சுவாரஸ்யமான டிப்ஸ்களை இனி பார்ப்போம்.

`கலை என்பது திருட்டே’ எனும் பிகாஸோவின் புகழ்மிக்க பொன்மொழியிலிருந்து துவங்குகிறது நூல். இன்னொருவரின் உழைப்பை அப்படியே திருடிக்கொள் என்பதல்ல க்லீயான் வலியுறுத்துவது. நீங்கள் எதில் ஈர்க்கப்படுகிறீர்களோ அதை இன்னொன்றாக மாற்றுங்கள். உங்கள் ரசனைக்கேற்ப அதை மேம்படுத்துங்கள். சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டு முற்றிலும் புதிய கலவையை உருவாக்குங்கள். ஒருவரை காப்பியடித்தால் அது திருட்டு; 100 பேரை காப்பியடித்தால் அதுவே ஒரிஜினலாக மாறிவிடும். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக நினைவில் கொள்ளுங்கள் ஒருபோதும் ஒருவரின் ஸ்டைலை காப்பியடிக்காதீர்கள்; அந்த ஸ்டைலின் பின்னேயுள்ள சிந்தனையை காப்பியடிக்க முயலுங்கள். `மெளனராகத்தின்’ மறுபதிப்புதான் `ராஜாராணி’. ஆனால் இருவேறு ஸ்டைல்கள். இருவேறு ட்ரீட்மெண்டுகள் இல்லையா?

எப்போதும் வாசித்துக்கொண்டே இருங்கள். வாசிக்க நேரம் வாய்க்காவிட்டாலும் உங்களைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் மிக சுவாரஸ்யமாக உங்களைக் கவர்ந்தால் அதை ஒரு ஸ்க்ராப் ஃபைலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு துண்டுச் சீட்டு, நாளிதழ் கிழிசல், பஸ் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கியது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சேமித்துக்கொள்ளுங்கள். பிற்பாடு நீங்கள் ஸ்க்ராப் ஃபைலை புரட்டும்போது உங்களுக்குப் புதிய திறப்புகள் உருவாகலாம்.

நீங்கள் எதைச் செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். உங்களுக்கென்று தனித்த ஸ்டைல் உருவாகும் வரை நீங்கள் சற்று போலி செய்வதில் தவறொன்றுமில்லை. பாதிப்புகளிலிருந்தே பல்வேறு கலைப்படைப்புகள் உருவாகின்றன. போலி செய்வதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எந்த ஒரு நல்ல கலையையும் முழுமையாக காப்பி செய்து விட முடியாது என்பதுதான். நீங்கள் ஒன்றினால் ஈர்க்கப்பட்டு அதை போலி செய்யும்போதே அது வேறொன்றாக இறுதியில் உருவாகி நிற்கும். உடனடி உதாரணம் சொல்வதானால் விஜய், தனுஷ், சிம்பு, பாபிசிம்ஹா ஆகியோர் நடிக்க வந்த காலகட்டத்தில் அவர்களிடம் ரஜினியின் பாதிப்பு இருப்பதாக விமர்சனம் எழுந்தது. ஆனால், பிற்பாடு இவர்களுக்கென பிரத்தியேக ஸ்டைல் உருவாகி வந்தது.

நீங்கள் நெருங்கிப் பழகும் ஐந்து நபர்களின் சராசரி வருமானம்தான் உங்களின் வருமானமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒரு தியரி. ரசனைக்கும் இது பொருந்தும். நீங்கள் நெருங்கிப்பழகும் நண்பர்கள், புத்தகங்கள், ரசனைகள் ஆகியவற்றின் மீது கவனமாக இருங்கள். விரும்பிய உலகில் நீங்கள் வாழ வாய்க்கவில்லையெனில் உங்களுக்கேற்றபடி உங்கள் உலகை வடிவமைத்துக்கொள்ளும் உரிமையும் வசதியும் உங்களுக்குள்ளதை மறக்க வேண்டாம்.

கரங்களைப் பயன்படுத்துங்கள்

கணினியும் பிற எலெக்ட்ரானிக் வஸ்துக்களும் நாம் நிறைய வேலை செய்கிறோம். கற்றுக்கொள்கிறோம். தெரிந்துகொள்கிறோம். எழுதுகிறோம் போன்ற பாவனைகளை உருவாக்கி விட்டு நம் நேரத்தை உறிஞ்சி விடுகின்றன. உண்மையில் மிதமிஞ்சிய தகவல்தொடர்பு தொடர்ச்சியான கவனச்சிதறலையே உண்டு பண்ணுகிறது. முழுமையான ஐடியா சிக்கும் வரை கரங்களையே பயன்படுத்துங்கள். மொத்த உடலையும் சிந்திப்பதற்காக எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என யோசியுங்கள். எப்போதும் இரண்டு வகையான மேஜைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு மேஜையில் புத்தகங்கள், தாள்கள், பென்சில்கள், வர்ண பேனாக்கள் உள்ளிட்டவைகள் மட்டும் இருக்கட்டும். எக்காரணம் கொண்டும் எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இது ஐடியாக்களை உருவாக்கும் மேஜை. இங்கே நீங்கள் சிந்தித்தவற்றை பேப்பரில் கிறுக்கவோ வரையவோ செய்ய வேண்டும். யோசிக்கும்போது ஒருபோதும் கவனச்சிதறல் ஏற்படுத்தும் செல்போனோ, லேப் டாப்போ அந்த மேஜையில் இருக்கக்கூடாது. இன்னொரு மேஜை டிஜிட்டல் மேஜை. நீங்கள் சிந்தித்தவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுக்க கணினியைப் பயன்படுத்த வேண்டும்.

வாழ்க்கையில் உங்களுக்குப் பிடித்த எந்தச் சிறிய விஷயத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டாம். பல சமயங்களில் இத்தகைய சிறிய ரசனைகளும் பொழுதுபோக்குகளும் உங்கள் படைப்பூக்கத்தை தூண்ட உதவக்கூடும். நீங்கள் செய்துவரும் வேலையில் சிறிய சோர்வு அல்லது தடங்கல் ஏற்படும்போது உங்கள் பிரியத்திற்குரிய பொழுதுபோக்கில் உற்சாகமாக ஈடுபடுங்கள். கிடப்பில் போட்ட பழைய புராஜெக்ட்களைத் திரும்ப செய்யுங்கள். படைப்பூக்கம் தானே ஓடிவரும்.

உங்கள் படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களது அபிப்ராயங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். இந்த உலகின் முன் உங்கள் திறமைகளை நீங்கள் காட்ட சமகாலத்தில் இணையம் ஒரு வரப்பிரசாதம். அதை சீராகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது ஐடியா திருடப்பட்டு விடும் எனும் பயம் இருந்தால் படைப்பின் சிறுபகுதியை மட்டும் வெளியிட்டு அபிப்ராயம் பெறலாம்.

பயணித்துக்கொண்டே இருங்கள். தூரமும் வித்தியாசங்களும் கலைக்கு எரிசக்தி என்கிறார் ஜான் லெகர். பயணங்களைப் போல நமக்கு புதிய திறப்புகளை அளிக்கக்கூடிய வேறொன்று இல்லை. புதிய நிலக்காட்சிகளும், மனிதர்களும், சுவைத்திராத உணவுகளும் பண்பாடுகளும் நம்பிக்கைகளும் பயணத்தின் சிறப்பம்சங்கள். பயணிக்க தோதில்லாத கொடுங்கோடை, கன மழை, கடுங்குளிர் காலங்களும் கூட போற்றுதலுக்குரியவையே. அவை நம்மை வீட்டுக்குள்ளே வைத்து நமது பணியில் தீவிரத்துடன் ஈடுபட உதவுகின்றன.

எப்போதும் சச்சரவுகளில் ஈடுபட்டு சண்டை இடும் மனநிலையிலிருந்து விடுபடுங்கள். கசப்பான விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக உங்களைப் பெரிதும் ஈர்த்த விஷயங்களை மனம் விட்டு பாராட்டுங்கள். பெரிய விஷயங்களை செய்ய உத்தேசித்திருப்பவர்கள் சிறிய சண்டைகளில் தலையை விட்டு தங்கள் ஆற்றலை வீணாக்க மாட்டார்கள்.

எல்லா நேரமும் படைப்பூக்கத்துடனேயே இருப்பது எவருக்குமே சாத்தியமில்லை. ஆனால், தினமும் குறிப்பிட்ட நேரத்தினை ஒதுக்கி சீராக இயங்குவது நல்ல பலன்களைத் தரும். தொடர்ச்சியான முயற்சியையும் பயிற்சியையும் போல தன்னம்பிக்கையளிக்கக் கூடிய பிறிதொன்றில்லை. அன்றாடத்தில் ஒழுங்குடன் இருப்பவன் கலையில் ஆக்ரோஷத்துடன் செயல்பட முடியும் என்பது ப்ரெஞ்ச் நாவலாசிரியர் ஃப்ளாபெர்டின் வாக்கு. ஒருபோதும் கடன்களில், மிதமிஞ்சிய செலவுகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். பணப்பற்றாக்குறையைப் போல படைப்பூக்கத்திற்கான எதிரான வேறொன்றில்லை.

தீவிரத்தன்மையும் அர்ப்பணிப்பும் படைப்பூக்கத்திற்கு மிக மிக முக்கியம். கணக்கற்ற முடிவிலா சாத்தியங்களைப் போல ஒரு ஐடியாவை முடக்கக்கூடியது எதுவும் இல்லை. நீங்கள் எதைப் பிறகு செய்யலாம் என தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறீர்களோ அந்த விஷயம்தான் நீங்கள் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டிய ஒன்று என்பதை உடனடியாக உணருங்கள். உங்கள் வாழ்க்கையின் வெற்றி நீங்கள் தள்ளிப்போடும் செயல்களில்தான் மறைந்துள்ளன. உள்வாங்குவதல்ல வெளிப்படுத்துவதே கலையில் மிக முக்கியமான அம்சம் என்பதை மறக்கக்கூடாது.

ஆஸ்டின் க்லீயான் தீவிரமான இலக்கிய வாசகர். தனக்கான படைப்பு சக்தியை அவர் இலக்கியத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறார் என்பதை அவர் காட்டும் மேற்கோள்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அவரே வரைந்துள்ள ஓவியங்களுடன் மிக சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் கிரியேட்டிவிட்டியை தக்கவைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூல்.

விதம் விதமான ஐடியாக்கள், ஆர்வங்கள், ரசனைகள், தகவல்கள் இவற்றை ஒரு ரஸவாதியைப் போல கலந்து உங்களுக்கான பாதையை நடையை கலையை கண்டடையுங்கள்..

selventhiran.k@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

மேலும்