காலநிலை மாற்றத்தால் மகசூல் அதிகரிப்பு: ஓசூரில் கோழிக்கொண்டை பூ விலை வீழ்ச்சி

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் அதிகரித்து, சந்தையில் கோழிக்கொண்டை பூவின் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஓசூர், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, இருதுகோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் விவசாயத்துக்குக் கைகொடுத்து வருவதால், இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நறுமணம் இல்லாத மலரான கோழிக்கொண்டை பூ ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது.

மேலும், பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும்,பண்டிகை காலங்களில் சந்தை வாய்ப்பும் அதிகம் என்பதாலும், உத்தனப்பள்ளி, அளேசீபம், அயர்னப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஆண்டு முழுவதும் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கோழிக்கொண்டை பூ மகசூல் அதிகரித்து, சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், பல விவசாயிகள் வயலில் பூவை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: சந்தையில் ரோஜா பூ விலை உயரும் போது, கோழிக்கொண்டை பூவை அதிகம் பயன்படுத்தி மாலை கட்டி விற்பனை செய்யப்படுவது உண்டு. இதனால் கோழிக்கொண்டை பூவுக்குச் சந்தையில் ஆண்டு முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும், ரோஜா மாலையின் மகுடம் சூட்ட கோழிக்கொண்டை பூ அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் கிலோ ரூ.100 வரை விற்பனையாகும். தற்போது, அனைத்துப் பூக்களும் நல்ல மகசூல் கிடைத் திருப்பதால், அனைத்துப் பூக்களின் விலையும் குறைந்துள்ளது. குறிப்பாக ரோஜா விலை சரிந்திருப்பதால், வியாபாரிகள் மாலை தொடுக்க ரோஜாவை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். இதனால், கோழிக்கொண்டை பூ கிலோ ரூ. 20 ஆக விலை சரிந்துள்ளது. இதனால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE